தஞ்சையில் கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
ஏரிக்கரையின் ஒரத்தில் விவசாயம் செய்து வரும் நூறுக்கும் மேற்பட்ட பட்டா, குத்தகைதாரர்களின் நிலங்களையும் சேர்த்து கடந்த மாதம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அறிவித்துள்ளார்
தஞ்சை மாவட்டம் மாரனேரி கிராம மக்களின் பட்டா குத்தகை நிலத்தை பொதுப்பணித்துறை கையகப்படுத்துவதை கண்டித்து அரசு ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தை அப்பகுதி மக்கள் நடத்தினர். கல்லணை கால்வாயானது கல்லணையிலிருந்து 4200 கனஅடி நீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதன்மூலம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 472 ஏக்கர்கள் உட்பட 694 ஏரிகள் மூலமாக 81 ஆயிரத்து 942 ஏக்கர் மறைமுக பாசன வசதி பெரும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ரூபாய் 2639.15 கோடி மதிப்பீட்டில் திறன்மிக்க நீர்மேலாண்மை திட்டமிடப்பட்டு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் நிதி உதவியுடன் செயல்படுத்த தமிழக அரசால் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கல்லணை கால்வாய் கிளைக் கால்வாய் பிரிவு கால்வாய் என மொத்தம் 1232 கிலோ மீட்டருக்கு நீளத்திற்கு பணிகள் நடைபெற்ற வருகிறது. 1714 மதகுகள் திரும்ப கட்டும் பணிவுடன் 29 மதகுகள் சீரமைக்கும் பணியும், 26 கால்வாயில் பாலம் திரும்பக் கட்டும் பணி மற்றும் 16 கால்வாய் பாலம் சீரமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. 108 கீழ் குமிழி அமைப்பு திரும்பக் கட்டும் பணி மற்றும் ஒரு கீழ் குமிழி அமைப்பு சீரமைக்கும் பணியும், 28 நீரோழுங்கிகள் திரும்பக் கட்டும் பணி மற்றும் ஒரு புதிய நீரோழுங்கி கட்டும் பணி நடைபெற உள்ளது. 20 பாலங்கள் கட்டும் பணியும் 10 பாலங்கள் சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பூதலுார் வட்டம், மாரனேரி கிராமத்தில் கல்லணை கால்வாய் விரிவாக்கத்திற்காக, அக்கிராமத்திலுள்ள ஏரிக்கரைக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், சுமார் 80 ஆண்டுகளுக்கு மேல் ஏரிக்கரையின் ஒரத்தில் விவசாயம் செய்து வரும் 100 க்கும் மேற்பட்ட பட்டா மற்றும் குத்தகைதாரர்களின் நிலங்களையும் சேர்த்து ஜூலை மாதம் 2ஆம் தேதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அறிவிப்பு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து கடந்த 13ஆம் தேதி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாண்டியனை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர் எந்த விதமான நடவடிக்கை எடுக்காமல், 18ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என மாரனேரி கிராமத்தில் தண்டோரா மூலம் அறிவிப்பு விடுத்தனர்.
இந்நிலையில், ஏரிக்கரையின் ஒரத்தில் பட்டா, குத்தகை நிலங்களில் விவசாயம் செய்யும் 100க்கும் மேற்பட்டோர் இன்று காலை, தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாரனேரி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில், ரேசன், ஆதார் உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களையும் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், 18ஆம் தேதி எங்கள் நிலங்களை கையகப்படுவதை நிறுத்த வேண்டும், எங்களது நிலங்களை எங்களுக்கு வழங்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர். அதற்குரிய கோப்புகளை பார்த்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்ட் தெரிவித்துள்ளார்.