அதிகாரிகளே மறந்திடாதீங்க பூதலூர் ஒன்றியமும் இருக்குங்க... விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் எதற்காக?
டெல்டா மாவட்டங்கள் என்றாலே தஞ்சையின் மேற்கு பகுதியைச் சேர்ந்த பூதலூர் ஒன்றியத்தையும் சேர்த்து தான் என்பதை அதிகாரிகளும் மறந்துவிட்டார்கள்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர். மாவட்டம் பூதலூர் ஒன்றியத்திலும் கனமழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதை கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
டிட்வா புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் தஞ்சை மாவட்டத்தில் அம்மாப்பேட்டை, பல்லவராயன் பேட்டை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உட்பட பல பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த இளம் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. மழை தொடர்ந்து பெய்ததால் பல பகுதிகளில் இளம் நாற்றுகள் மழை நீரால் அழுகியது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (சிபிஐ சார்பு) மாவட்டத் தலைவர் ஆர். இராமச்சந்திரன் தஞ்சை மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
டெல்டா மாவட்டங்கள் என்றாலே தஞ்சையின் மேற்கு பகுதியைச் சேர்ந்த பூதலூர் ஒன்றியத்தையும் சேர்த்து தான் என்பதை அதிகாரிகளும் மறந்துவிட்டார்கள். சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக கடுமையான மழை பெய்து நெல் மற்றும் வெற்றிலை,கரும்பு உள்ளிட்ட சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால் தஞ்சையின் மேற்கு பகுதியில் உள்ள பூதலூர் ஒன்றியத்தில் குறிப்பாக சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
சமீபத்தில் பெய்த கடும் மழையினால் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சேதங்களை தமிழ்நாடு அரசு கணக்கெடுக்க அறிவித்துள்ள அடிப்படையில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் பூதலூர் ஒன்றியத்தையும் கணக்கில் கொண்டு சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனுக்காக வசூல் செய்வதற்கு வங்கி நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது உள்ள சூழல்களை கணக்கில் கொண்டு கடன் வசூல் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதாது. ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை கடன் வாங்கி விவசாயிகள் சாகுபடி செய்துள்ளோம். எனவே நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் விவசாயிகள் கலெக்டர் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலகம் வெளியில் வந்து ஆர்ப்பாட்டமும் நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்டா மாவட்டத்தில் டிட்வா புயலால் தொடர்ந்து பெய்த கனமழையால் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் இளம் சம்பா, தாளடி நாற்றுகள் மழைநீரில் மூழ்கி அழுகிவிட்டது. இதனால் அந்த அழுகிய நாற்றுக்களை அப்புறப்படுத்தி புதிதாக நாற்று நட வேண்டிய நிலை உள்ளது என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.





















