மயிலாடுதுறையில் ரூ.2 கோடிக்கு விற்பனையான பருத்தி!
செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் 3100 குவிண்டால் பருத்தி 2 கோடி ரூபாய்க்கு கொள்முதல் நடைப்பெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்த படியாக கரும்பு மற்றும் பருத்தி பிரதான விவசாயமாக செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 4586 ஹெக்டேர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் தற்போது, பருத்தி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் பருத்தியை மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் மற்றும் சீர்காழியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
அவ்வகையில், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாகப்பட்டினம் விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் தலைமையில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் 3,100 குவிண்டால் பருத்தியை விற்பனைக்காக கொண்டுவந்தனர். இந்த ஏலத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாருர், தேனி, சத்தியமங்கலம், ஆத்தூர், விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 13 வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர்.
இந்த ஏலத்தில் பருத்தி மத்திய அரசின் அதிக பட்ச ஆதாரவிலை 5825 ரூபாயை விட பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக 7,185 ரூபாய்க்கும், சராசரியாக 6,350 ரூபாய்க்கும் வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். இந்த ஏலத்தில் மொத்தம் 2 கோடி ரூபாய் மதிப்புடைய பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. மத்திய அரசின் ஆதாரவிலையை விட அதிக விலைக்கு பருத்தி ஏலம் போனதால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தாண்டு அதிகளவில் பருத்தி மகசூல் கொண்டுள்ளதால் விவசாயிகள் பருத்தியை அதிக அளவில் விற்பனைக்கு எடுத்து வருகின்றனர். இதனால் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் போதிய இடவசதி இல்லாததால் திறந்த வெளியில் பருத்தியை வைக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், இதனால் திடீர் மழையில் நனைந்து பருத்தி பாழ் ஆகும் நிலை உள்ளது என்றும், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் திறந்த வெளியில் பருத்தியை வைத்திருந்த பல விவசாயிகளின் பருத்திகள் மழையில் நனைந்து சேதம் அடைந்தது.
பெரும் நஷ்டத்தை சந்தித்ததாகவும், விவசாயிகள் கடும் சிரமப்பட்டு உற்பத்தி செய்து இது மகசூல் ஈட்டிய நிலையில் இதுபோன்று கடைசி கட்டத்தில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத வண்ணம் ஆகிவிடுவதாகவும், தமிழ்நாடு அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் இது போன்று விவசாயிகள் விற்பனைக்காக ஒழுங்கு முறை விற்பனை நிலையத்திற்கு கொண்டு வரும் பருத்தி மழையில் நனைந்து வீணாவதை தடுக்க ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கூடுதல் வசதிகளும் பருத்தியை பாதுகாப்பாக வைப்பதற்கு போதிய இடவசதியே ஏற்படுத்தி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் மழையில் நனைந்து சேதமான பருத்தி களை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.