தஞ்சையில் டெல்டா சூப்பர் மார்க்கெட்டில் பண மோசடி - செயல் இயக்குனர் கைது
டெல்டா சூப்பர் மார்க்கெட்டில் முறைகேடாக ரூ.39.50 லட்சம் முறைகேடு செய்த செயல் இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
விவசாயிகளை ஒருங்கிணைத்து தொடங்கப்பட்ட டெல்டா சூப்பர் மார்க்கெட்டில் முறைகேடாக ரூ.39.50 லட்சம் முறைகேடு செய்த செயல் இயக்குனரை தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சை நியூ ஹவுசிங் யூனிட் பகுதியில் ஆயிரம் விவசாயிகளை உறுப்பினராக கொண்டு கடந்த 2015-ம் ஆண்டு டெல்டா சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் சார்பில் 15 பேரை இயக்குநராக கொண்டு அதன் செயல் இயக்குநராக தொழில் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இவர் 1-6-2016 முதல் 31-1-2017 வரை உள்ள காலத்தில் சூப்பர் மார்க்கெட் பணம் ரூ.39 லட்சத்து 56 ஆயிரத்து 126 கையாடல் செய்து மோசடி செய்ததாக 2019-ம் ஆண்டு புகார் செய்யப்பட்டது.
அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. இதன்படி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த தொழில் அதிபரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் தஞ்சை 2-வது நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தபட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.
தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது
தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தொடர்ந்து வழிப்பறி செய்தும், பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருடியும் அரசு மதுபான கடைகளை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை பிடிக்க தஞ்சை எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் திருவிடைமருதூர் துணை கண்காணிப்பாளர் ஜெகபர்சித்திக் மேற்பார்வையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் கவியரசன் போலீசார் ரமணி, விக்னேஷ் தினேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய திருவாடுதுறை குமார், தஞ்சாவூர் மாதவனை ஆகியோர் ஆடுதுறை பஸ் நிறுத்தத்தில் நின்றிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன. மேலும் அவர்கள் பயன்படுத்திய பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.
லாரி மோதி ஒருவர் பலி
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் திருவெங்கனூர் நடுத்தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (52) இதே பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (63). இவர்கள் இருவரும் மொபட்டில் திருவையாறில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டு விட்டு திருவெங்கனூர் புறப்பட்டு சென்றனர்.
மொபட்டை தர்மராஜ் ஓட்டி சென்றார். பின்னால் முத்துசாமி அமர்ந்திருந்தார். திருவையாறு தேரடி அருகே செல்லும்போது செங்கிப்பட்டியிலிருந்து பண்ருட்டிக்கு கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி எதிர்பாரதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் தர்மராஜ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். முத்துசாமி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.