தஞ்சையில் MBBS படிப்புக்கு கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மாணவிக்கு உதவிய தொழிலதிபர்...!
இரண்டாமாண்டுக்கு படிப்பதற்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல், தவித்து வந்தார். இதனால் அவரது மருத்துவக் கனவு கேள்விக்குறியான நிலையில், மனமுடைந்து காணப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பூவாணம் கிராமத்தை சேர்ந்த, விவசாய கூலித் தொழிலாளி செல்வராஜ். இவரது மனைவி சூரியகலா. இவரும் கூலித்தொழிலாளியாக உள்ளார். இவர்களது மூத்த மகன் கீர்த்திகா பிஎஸ்சி, பிஎட் படித்துள்ளார். இரண்டாவது மகள் சுசிதாதுளசீலி (21) நீட் மூலம் தேர்வு பெற்று, தற்போது பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். மூன்றாவது மகள் ரசிகா, +2 படித்து விட்டு, கல்லுாரியில் சேருவதற்கு பணம் இல்லாததால், வீட்டிலேயே இருந்து வருகிறார். நான்காவது மகன் மகிழ்அமுதன் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். மருத்துவ படிப்பு படிக்கும் சுசிதாதுளசீலிக்கு முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தை உறவினர்கள் சேர்ந்து கட்டினர்.
இந்நிலையில், தற்போது இரண்டாமாண்டுக்கு படிப்பதற்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல், தவித்து வந்தார். இதனால் அவரது மருத்துவக் கனவு கேள்விக்குறியான நிலையில், மனமுடைந்து காணப்பட்டார். நீட் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் போய்விடுமோ என்று வேதனையில் இருந்து வந்தார். இது குறித்து பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமாரிடம் தனது படிப்பு குறித்தும், வசதியில்லாமல் மேற்கொண்டு படிக்க முடியாத நிலையையும் மாணவி சுசிதா துளசீலி பெற்றோர்களுடன் சென்று முறையிட்டார்.
இது குறித்து எம்எல்ஏ அசோக்குமார், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவரும், தொழிலதிபருமான காந்தியிடம் தகவலை தெரிவித்தார். மருத்துவ கல்லுாரி மாணவி படிப்பிற்காக போதுமான பணம் இல்லாமல் தவித்ததால், மனமுவந்து,தனது சொந்தப் பணத்தை கல்விக்காக வழங்க உதவ முன் வந்தனர்.இதனை தொடர்ந்து, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் முன்னிலையில், மாணவியின் தந்தை செல்வராஜிடம், மாணவி மருத்துவப்படிப்பு படிப்பதற்காக தொழிலதிபர் காந்தி ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். பின்னர், சுசிதா துளசீலி இரண்டாம் ஆண்டு படிப்பிற்கு தேவையான கல்வி செலவினை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளோம் காந்தி தெரிவித்தார்.
இது குறித்து சுசிதா துளசீலி தந்தை செல்வராஜ் கூறுகையில்,
கடந்தாண்டு நீட் தேர்வு எழுதி தேர்வு பெற்று தனியார் மருத்துவ கல்லுாரியில் படித்து வருகிறார். முதலாமாண்டு மருத்துவ படிப்பிற்காக உறவினர்கள், நண்பர்களிடம் கடனாக பணத்தை வாங்கி படிக்க வைத்து விட்டேன். இரண்டாம் ஆண்டு படிப்பிற்கு பணம் இல்லாததால், பலரிடம் சென்று கேட்டேன், யாரும் வழங்க முன்வராததால், எம்எல்ஏ அசோக்குமாரிடம் முறையிட்டதால், அவர் கூறியதின் பேரில், காந்தி என்ற தொழிலதிபர் ஒரு லட்சம் பணம் வழங்கியுள்ளார். மூன்றாவது மகள் ரசிகா, +2 படித்து விட்டு, கல்லுாரி படிப்பு படிக்க வசதியில்லாததால், வீட்டிலேயே இருக்கின்றார். இரண்டாவது மகள் சுசிதாதுளசீலி, இனி வரும் மூன்றாண்டுகள் மருத்துவ படிப்பிற்கும், மூன்றாவது மகள் ரசிகாவின் மேல் படிப்பிற்கும், நல்ல உள்ளம் கொண்டவர்கள் கல்வி செலவிற்கு நிதியுதவி வழங்குவார்கள் என கடவுளை வேண்டிக்கொண்டிருக்கின்றேன். எனது மகளின் மருத்துவ கனவை நினைவாக்குவதற்கு உதவியர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்றார்.