தேர்தல் ஆணையமா? கைப்பாவையா? தஞ்சையில் கடுமையாக விமர்சித்தது யார்?
பாஜக வலையில் சிக்கியுள்ள அவர் தப்ப முடியாது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

தஞ்சாவூர்: பாஜகவின், மோடியின், ஆர்.எஸ்.எஸ்.-ன் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் இரா. முத்தரசன் கடுமையாக விமர்சனம் செய்தார்.
தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே திமுக வேட்பாளர் சண். இராமநாதனை ஆதரித்து நேற்று இரவு பிரசாரம் செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நடைபெறக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டும். ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் தொடர்ந்து எடுத்து வரக்கூடிய நடவடிக்கைகள், தேர்தல் ஜனநாயக முறையில் அமைதியாக நடைபெறுமா என்கிற அச்சத்தையும், கவலையையும் உருவாக்கி இருக்கிறது.
தேர்தல் ஆணையம் என்பது நமது மிக உயர்ந்த, நாட்டை வழிநடத்துகிற சட்டமான அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தனித்த, சுதந்திரமாக செயல்படக்கூடிய சிறந்த அமைப்பாகும். அந்த அமைப்புதான் தேர்தலை நடத்துகிறது. ஆனால் அந்த அமைப்பு இன்றைக்கு ஒட்டுமொத்தமாக மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-ன் கைப்பாவையாக மாறிவிட்டது என்பது மிகுந்த கவலை அளிக்கிறது.
மோடியின் உத்தரவை செயல்படுத்தக்கூடிய அமைப்பாக மாறிப்போய்விட்டது. அரசியலமைப்பு சட்டப்படி செயல்படக்கூடிய அமைப்பாக இல்லாமல், ஒரு சுதந்திர சுயாட்சி அமைப்பாக இல்லாமல், மோடி, அமித்ஷா என்ன உத்தரவிடுகின்றனரோ, அதை அடிபணிந்து, ஏற்று, நிறைவேற்றுகிற ஒரு அடிமை அமைப்பாக மாறி இருப்பது என்பது நாட்டினுடைய ஜனநாயகத்துக்கு இழைக்கப்பட்டிருக்கிற மிகப்பெரிய அநீதியாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து தரம் தாழ்ந்து பேசுகிறார்.
இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெறப்போவதில்லை என்பதால், ஆவேசப்பட்டு சாபமிடுகிற நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். பாஜக வலையில் சிக்கியுள்ள அவர் தப்ப முடியாது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமை குழு உறுப்பினர் பிரச்சாரம்
விஜய் தனது தொண்டர்களை வெறும் ரசிகர்களாக மட்டுமே வைத்து, அவர்களை அரசியல் அற்றவர்களாக மாற்றி வைத்துள்ளார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி தெரிவித்தார்.
தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகே திமுக வேட்பாளர் சண். இராமநாதனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் பேசியதாவது: விஜய் தனது கட்சி உறுப்பினர்களை அரசியல்படுத்துவதற்கான முயற்சி செய்வதாகத் தெரியவில்லை. அக்கட்சி உறுப்பினர்களுக்கு கொள்கை என்ன என்பதே தெரியவில்லை. விஜய் அண்ணன் வெற்றி பெற வேண்டும் என்பதை மட்டுமே சொல்கின்றனர்.
விஜய் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளதாகக் கூறுகிறார். எம்ஜிஆர் உள்பட எல்லோருமே அவரவர் துறையைச் சார்ந்த பதவிகளை விட்டுவிட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளனர். விஜய் மட்டும் வரவில்லை. விஜய் கொள்கைகளைப் பேசாமல் இளைஞர்களை அரசியல்படுத்தாமல், அவர்களை அரசியல் அற்றவர்களாக்கி, வெறும் ரசிகர்களாக மட்டுமே வைத்துள்ளார்.
கரூரில் இவரை பார்க்க வந்த 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மக்களுக்கு ஏதாவதொன்று என்றால், இந்த விஜய் வருவான் என அவர் பேசுகிறார். ஆனால், கரூரில் 41 பேர் உயிரிழந்தபோது, அவர்களுக்கு இருந்து ஆறுதல் சொல்லாமல், அங்கிருந்து பனையூருக்கு ஓடிவிட்டார். இதுபோன்ற அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















