சீமானை கைது செய்யுங்கள்... தஞ்சை எஸ்.பி.,யிடம் மனு அளித்த திராவிட கழகத்தினர்
இது போன்று ஒரு கேவலமான பேச்சினை தந்தை பெரியார் எந்த ஒரு இடத்திலும் பேசியதில்லை, எழுதியதில்லை. சீமான் தனது அரசியல் சுயலாபத்திற்குத் திட்டமிட்டு பெரியாரின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
தஞ்சாவூர்: தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பொதுவெளியில் தெரிவித்து வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமையில் எஸ்.பி., ராஜாராமிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 8ம் தேதி வடலூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய வீடியோவை நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வமான யூடியூப் தளத்தில் பதிவேற்றியுள்ளனர். இதில் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில் தந்தை பெரியார் கூறியது என்று அவதூறான கருத்துக்களை பேசுகிறார். இது பெரியார் தொண்டர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது போன்று ஒரு கேவலமான பேச்சினை தந்தை பெரியார் எந்த ஒரு இடத்திலும் பேசியதில்லை, எழுதியதில்லை. சீமான் தனது அரசியல் சுயலாபத்திற்குத் திட்டமிட்டுத் தந்தை பெரியாரின் நன்மதிப்பை குலைக்கும் வகையில் எந்தவித ஆதாரமின்றி பொய்யான செய்தியை இட்டுக்கட்டி, இவ்வாறு பேசியிருக்கிறார்.
தந்தை பெரியார் மீது சுமத்தப்படும் இந்த அவதூறு அவரது புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் மோசமான செயலாகும். இளைஞர்கள் மத்தியில் பொய்யைப் பரப்பும் சீமானின் அவதூறுப் பேச்சு அவரது தொண்டர்களுக்கு தாங்க முடியாத வேதனையை தருகிறது. தந்தை பெரியார் பற்றி, அவர் சொல்லாத, அவர் நடத்திய விடுதலை பத்திரிகையில் வெளிவராத. அவர் எழுதிய புத்தகங்களில் இல்லாத வார்த்தைகளை, கருத்தைப் பொது வெளியில் பெரியார் சொன்னதாக கூறி சட்டம் ஒழுங்கு சீர்குலைய வேண்டுமெனும் நோக்கில் தீய நோக்கத்தோடு பேசியுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இவரது ஆதரமற்ற இந்த பேச்சு நாம் தமிழர் கட்சியின் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதனால் பொதுச்சமூகத்தில் ஒரு பதட்டமான கலவர சூழல் ஏற்பட்டுள்ள காரணத்தால் அந்த காணொலிகளை உடன் நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் பெரியாரை நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்ததை கண்டித்து நேற்று விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கும்பகோணத்தில் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஜெய் சங்கர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சாரங்க பாணி கோவில் எதிரில் இருந்து விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகிகள் சீமான் உருவப்படத்தை கையில் ஏந்திக்கொண்டு கோஷங்கள் எழுப்பியவாறு உச்சிப்பிள்ளையார் கோயில் வரை ஊர்வலமாக வந்தனர்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீமானின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதில், மாநில செயலாளர் சேகர், அமைப்பு செயலாளர் தளபதி சுரேஷ், மாநில ஊடக பிரிவு செயலாளர் ரியாஷ், மாநில செய்தி தொடர்பாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.