அரிவாளை ஓங்கி மிரட்டும் திமுக முன்னாள் எம்எல்ஏ: பின்னணி என்ன?
நிகழ்ச்சிக்கு தனக்கு முறையான அழைப்பு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனக் கூறி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகம் தேங்காய் உடைக்கும்போது தகராறு செய்தார்.

தஞ்சாவூர்: முன்னாள் எம்எல்ஏ., அரிவாளை ஓங்கி மிரட்டினாரா? இதுதான் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பேசப்படும் பேச்சாக உள்ளது. காரணம் ஒரு வீடியோ. சரி இதன் பின்னணிதான் என்ன? நடந்ததுதான் என்ன?
பூமி பூஜை நிகழ்வுக்காக தனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை. தன்னை அழைக்கவில்லை என்ற கோபத்தில் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் ஒப்பந்ததாரரை அரிவாளைக் காட்டி மிரட்டியதாகச் சொல்லப்படும் சம்பவம்தான். இதுகுறித்த வீடியோதான் தற்போது இணையத்தில் அதிகம் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயில் நகரில் தீயணைப்புத் துறைக்குப் புதிய கட்டிடம் ரூ 2.50 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில்தான் இந்த அரிவாள் மிரட்டல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தப் பூமி பூஜையை அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகள், தி.மு.க கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தனக்கு முறையான அழைப்பு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனக் கூறி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகம் தேங்காய் உடைக்கும்போது தகராறு செய்தார்.
அப்போது, அங்கிருந்த ஒப்பந்ததாரர் முன்னாள் எம்எல்ஏவிடம் ஏதோ கூற ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் நின்ற பக்கம் அரிவாளைத் தூக்கிக் காண்பித்து ஆவேசப்பட்டார் முன்னாள் எம்எல்ஏ. இது நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதனால், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகு உதயம் சண்முகம் அங்கிருந்த சாமியானா பந்தல் அருகே செல்ல, அங்கு வந்த ஒருவருடன் வாக்குவாதம் செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் ஒப்பந்ததாரரைப் பார்த்து அரிவாளைக் காட்டி மிரட்டும் அந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் எம்எல்ஏவின் இந்த செயல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இப்படி ஒரு பொது நிகழ்ச்சியில் ஆயுதத்தை காட்டி மிரட்டுவது போன்ற செயல் சரியானதா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.





















