தீபாவளி பண்டிகையை ஒட்டி 3 நாட்கள் 1870 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு
அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் அனைத்து நகர பஸ்கள் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரி வான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை 3 நாட்கள் 1,870 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.
தீபாவளியை தீ ஒளி என முன்னோர் குறிப்பிடுகிறார்கள். தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்கின்றனர். ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள். தீபாவளி பண்டிகை தீமையின் வடிவான அசுரர்களை கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானது என்கின்றன இந்துப் புராணங்கள்.
நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன். அசுரவதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுரசுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்துவிட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.
தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார். அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசுரன் போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி சரிந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது.
அவரிடம் அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி, ஒளிமயமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பண்டிகை தமிழகத்தில் வெகு உற்சாகமாக கொண்டாடப்படும். இதற்காக பல்வேறு ஊர்களில் உள்ளவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவர். இதனால் அவர்களுக்கு தேவையான பஸ் வசதியை அரசு செய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வருகிற 9ம் தேதி (வியாழக்கிழமை) முதல் 11ம் தேதி (சனிக்கிழமை) வரை பொது மக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு 9ம் தேதி 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
10ம் தேதி 750 சிறப்பு பஸ்களும், 11ம் தேதி 520 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. திருச்சியில் இருந்து தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு 350 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் அனைத்து நகர பஸ்கள் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரி வான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னி லம், திருவையாறு, ஒரத்தநாடு தட பஸ்கள் தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்தும், நாகை, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பஸ்கள் கோயம்பேடு எம்.ஜி.ஆர்.பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட உள்ளது.
மேலும் தீபாவளி முடிந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்ப 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை மேற்குறிப்பிட்டவாறு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. எனவே பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன் பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பயணிகள் www.tnstein முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தைச் சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.