விடுமுறை நாட்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களை இயக்க வேண்டும்... குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.

தஞ்சாவூர்: விடுமுறை நாட்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும். குறுவை சாகுபடியில் புகையான் தாக்குதல் உள்ளது. இதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
ஜீவகுமார்: குறுவை சாகுபடியில் புகையான் பிரச்சனை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் தற்போது முன் பட்ட குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை கொண்டு அனைத்து பகுதிகளிலும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். அதேபோல் விடுமுறை நாட்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களை இயங்க செய்ய வேண்டும். தற்போது பருவமழை பெய்து வருவதால் ஈரப்பதத்தை தளர்த்த வேண்டும். அதேபோல் அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் டிரையர் வசதி செய்து தர வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் சுமைதூக்கும் தொழிலாளிகளுக்கு தினந்தோறும் கூலி வழங்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தை அதிகப்படுத்த வேண்டும்.
தோழகிரிபட்டி கோவிந்தராஜ்: தஞ்சை மாவட்டத்தில் யூரியா உர தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பயிர் கடன் பெற்ற விவசாயிகள் பழைய நடைமுறைப்படி வட்டியை கட்டி புதுப்பித்து கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கரும்பு வெட்டு கூலியை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும் அதற்கு அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஆம்பலாப்பட்டு தங்கவேல்: ஒரத்தநாடு வட்டத்தில் ஆம்பலாப்பட்டு தெற்கு, வடக்கு மற்றும் சிவ கொள்ளை ஆகிய மூன்று வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த இந்த வருவாய் கிராமங்களில் சுமார் 5000 கால்நடைகளை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பராமரித்து வருகின்றனர். கால்நடைகளுக்கு திடீரென நோய்வாய்ப்பட்டால் அதற்கு சிகிச்சை பெற மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே 3 கிராமத்திற்கும் கால்நடை மருந்தகம் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய பணிக்கு ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டர் மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்ப வேண்டும்.
ஏகேஆர். ரவிச்சந்தர்: நெல் கொள்முதல் செய்ய ஈரப்பதம் அளவை தளர்த்தும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டருக்கு வழங்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உளள அரசு அலுவலர்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நியமனம் செய்து கொள்ளலாம் என வருவாய் துறை செயலாளரும்,. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா அறிவுறுத்தியுள்ளார். எனவே தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பணி நியமனம் செய்ய வேண்டும். திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள புதிய போக்குவரத்து பாலத்தில் மின் கம்பம் இருந்தும் ஒரு மின்விளக்கு கூட எரியாமல் உள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மின்விளக்குகள் ஒளிரச் செய்ய ஆவண செய்ய வேண்டும்.
பெரம்பூர் அறிவழகன்: திருவையாறு பகுதியில் குறுவை அறுவடை நடைபெறுகிறது. கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதம் உயர்த்த வேண்டும். தமிழ் நிலம் வலைதளத்தில் கணினி சிட்டா பட்டா எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் வலைதளம் அடிக்கடி வேலை செய்யாமல் இருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திர பதிவுத்துறை சார்ந்த அலுவலர்கள் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். வேளாண் பொறியியல் துறையில் நடவு எந்திரம் இ-வாடகைக்கு கிடைத்திட வேண்டும். சம்பா பருவத்திற்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும் ஆவன செய்ய வேண்டும்.
பேராவூரணி ஜெயராஜ்: தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறை பகுதியில் மட்டுமே மண் பரிசோதனை நிலையம் இருப்பதால் வேறு பகுதியில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அனைத்து தாலுகாவிலும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் மண் பரிசோதனை சேகரித்து எடுத்துச் செல்ல வேண்டும்.
சேதுபாவாசத்திரம் ராமகிருஷ்ணன்: பூக்கொல்லை, ஆவணம், பேராவூரணி பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பொது கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.
பழனியப்பன்: ஒரத்தநாடு தாலுகா ஈச்சங்கோட்டை நடுவூர் கால்நடை பண்ணையில் சிப்காட்டிற்கு நிலம் எடுப்பதை கைவிட வேண்டும். விவசாயத்திற்கு பயன்படும் நோய் மருந்து பூச்சி மருந்துக்கு உள்ள ஜிஎஸ்டி வரி 18 சதவீதம் முற்றிலும் நீக்க வேண்டும். ஒரத்தநாடு நெடுஞ்சாலை துறை செல்லம்பட்டி வெட்டிக்காடு பகுதியில் ரூபாய் 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இதுவரை வேலை நடைபெறவில்லை. தற்போது அறுவடை செய்ய வேண்டிய நெல்லில் புகையான் போன்ற நோய் தாக்கம் ஏற்படுகிறது. இதற்கு வேளாண்மை துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கக்கரை சுகுமார்: சம்பா சாகுபடிக்கு விதைநெல் எவ்வளவு உள்ளது என்பதை வேளாண்மை துறையினர் தெரிவிக்க வேண்டும். விவசாயிகள் கேட்கும் விதை நெல்கள் வேளாண்மை துறையில் இருப்பதில்லை. அதற்கு பதிலாக அவர்கள் வேறு ரக நெல்லை வழங்குகிறார்கள். எனவே விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப விதை நெல்லை வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வேளாண்மை துறை இணை இயக்குனர் வித்யா, மின்வாரிய மேற்பொறியாளர் விமலா, நீவளத்துறை அதிகாரிகள், பொதுப்பணி துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





















