சதயவிழா: ராஜராஜ சோழன் சிலைக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவில் இரண்டாம் நாள் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது.
மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவில் இரண்டாம் நாள் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் நிகழ்ச்சியாக அரசு சார்பில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராஜராஜ சோழன் சதய விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இரண்டாம் நாளான இன்று காலை மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதையடுத்து தருமபுர ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் சார்பில் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கி சிறப்பித்தார்.
பின்னர் பெரிய கோயில் அருகில் உள்ள மாமனார் ராஜராஜன் சோழன் சிலைக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சதய விழா குழு தலைவர் து.செல்வம், மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா கந்தபுனேனி, சதய விழா குழு உதவி ஆணையர் கோ.கவிதா, எம்.எல்ஏ., துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் மாநகர மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர் எஸ் .சி .மேத்தா, அழகிய தஞ்சை திட்ட இயக்குனர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருமுறை ஓதுவார் திருமறை பன்னுடன் சார்பில் திருமுறை வீதி உலா தஞ்சையின் ராஜ வீதிகள் என்றழைக்கப்படும் மேலவீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி, வழியாக மீண்டும் பெரிய கோயிலை வந்தடைந்தது. அடுத்து சதய விழாவை முன்னிட்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்குபல்வேறு வாசனை திரவிய பொருட்களால் பேராபிஷேகமும், பெரும் தீப வழிபாடும் நடைபெற்றது.
மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் சதய விழா குழு தலைவர் து.செல்வம் வரவேற்று பேசுகிறார் .கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை உரையாற்றுகிறார். எம்.பி.க்கள் எஸ். எஸ். பழனி மாணிக்கம், செ.இராமலிங்கம், எஸ் கல்யாணசுந்தரம், மு. சண்முகம், முன்னாள் அமைச்சர் எஸ். என்.எம்.உபயத்துல்லா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு விழா பேருரை ஆற்றுகிறார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு கொறடா கோ.வி. செழியன், பொன்னம்பல அடிகளார், அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். இறுதியில் இந்துசமய அறநிலை துறை உதவி ஆணையர் கவிதா நன்றியுரை ஆற்றுகிறார். நிகழ்ச்சியின் இறுதியாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
அரசு சார்பில் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு அமைப்புகள், கட்சியினர் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். சதய விழாவை ஒட்டி இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை வரை பல்வேறு அமைப்பினரும் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கின்றனர். சதய விழாவை ஒட்டி தஞ்சை மாநகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.