நத்தையை விட ஸ்லோவா செய்யறீங்களேப்பா.... ரயில் பயணிகள் அதிருப்தி எதற்காக?
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்னும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்: எக்ஸ்பிரஸ் வேகம் இல்லாட்டியும் பரவாயில்லை... பாசஞ்சர் வேகத்திலாவது தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளை செய்யலாமே. பணிகள் கால தாமதமாக நடப்பதால் நாங்க தானே அவதிக்கு உள்ளாகிறோம் என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர் பயணிகள்.
நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் 2023, ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில், தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரூ. 21.17 கோடி மதிப்பில் புதிய பார்சல் அலுவலகம், காத்திருப்போர் அறை, முனையக் கட்டடம், கழிப்பறைகள், சுரங்கப்பாதை உள்ளிட்டவை புதுப்பிக்கவும், புதிய நுழைவு வாயில், கழிப்பறை வசதிகள், மேற்கூரைகள் முழுமையாக நீட்டிப்பு உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டன.
ஆனால், பணிகள் கால தாமதமாகத் தொடங்கப்பட்டது மட்டுமல்லாமல், அத்திட்டத்தை முடிப்பதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதில், வாகன நிறுத்துமிடம், காத்திருப்போர் அறை, பயணச்சீட்டு வழங்குமிடம் உள்பட சில பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டாலும், இன்னும் முடிக்கப்படாமல் உள்ள பணிகளும் உள்ளன. ரயில் நிலைய நுழைவு வாயிலில் இரு புறமும் வளைவுகள் அமைக்கப்படும் என முதலில் கூறப்பட்டது. ஆனால், தற்போது ஒரு வளைவு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
சரி இந்த பணியாச்சும் முழுமையாக முடிச்சாங்களா. இல்லையே இதுவும் முழுமையாக முடிக்கலை. நடைமேடையில் மேற்கூரை நீட்டிக்கப்படும் பணி இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் ரயிலில் ஏறவும், இறங்கவும் வரும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் சிரமப்படுகின்றனர். தற்போது மழையும் பெய்கிறது... வெயிலும் வாட்டுது. நாங்க அவதியோ அவதின்னு தவிக்கிறோம். குழந்தைகளுடன் வரும் குடும்பத்தினர் நிலையை யோசிச்சு பாருங்க.
இதனிடையே, அம்ரித் பாரத் திட்டப் பணிகள் 2024, நவம்பர் மாதத்தில் முடிக்கத் திட்டமிடப்பட்ட நிலையில், கால தாமதம் காரணமாக முடிக்கப்படவில்லை. இதனால், இப்பணியை கடந்த மார்ச் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்பவும் முடியலை. பணிகள் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் மாதத்துக்கு முடிந்திடும் என்று சொன்னாங்க. ஆனால் இப்போ ஜூன் மாதமும் வந்திடுச்சு. பணிகள் நத்தையை விட மெதுவாக நடக்கிறது. இந்த பணிகளை விரைவுப்படுத்தி சீக்கிரமே முடிக்கணும். இவ்வாறு ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கச் செயலர் வெ. ஜீவகுமார் கூறியதாவது: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அனைத்து பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால் பல பணிகள் அரைகுறையாக இருக்கிறது. இத்திட்டம் முடிக்கப்படும் காலக்கெடு 5 முறை நீட்டிக்கப்பட்டும், இன்னும் முடிக்கப்படவில்லை. இதற்கு ஒப்பந்ததாரரை காரணம் சொல்கின்றனர்.
இதனிடையே, இத்திட்டப் பணிகளை மத்திய ரயில்வே இணை அமைச்சர் வி. சோமண்ணா, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தாலும், இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. இப்பணிகள் ஜூலை மாதத்துக்குள் முடிக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தாலும் அதற்காக எந்த முகாந்திரமும் தென்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதுவரை 80 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பணிகள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படுகிறது. மீதமுள்ள பணிகள் இந்த மாதத்துக்குள் முடிக்கப்படும் என ரயில்வே துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்துடன் தொடங்கப்பட்ட திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், விருத்தாசலம், மன்னார்குடி, சிதம்பரம், போளூர், திருவண்ணாமலை ஆகிய ரயில் நிலையங்களில் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கடந்த மே 22ம் தேதியே வந்துவிட்டது. இதுபோல, நாடு முழுவதும் 106 ரயில் நிலையங்களில் பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால், தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்னும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, இப்பணிகளை விரைவாக முடித்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.






















