சிகிச்சை அளிக்க தாமதம்; கர்ப்பிணி வயிற்றிலே உயிரிழந்த பச்சிளங் குழந்தை - பட்டுக்கோட்டையில் நடந்தது என்ன?
தஞ்சை, பட்டுக்கோட்டை அருகே அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் வயிற்றிலேயே குழந்தை இறந்து பிறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பட்டுக்கோட்டை அருகே நாட்டுசாலை அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்ணுக்கு சி்கிச்சை அளிப்பதில் தாமதம ஏற்பட்டதால், வயிற்றிலேயே குழந்தை இறந்த பிறந்த நிலையில், டாக்டர்களை கண்டித்து பெண்ணின் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காக்க வைக்கப்பட்ட கர்ப்பிணி:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மிலாரிக்காடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (24). கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிநிலா (23). நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். தொடர்ந்து இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் நாட்டுச்சாலை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக உறவினர்கள் கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
ஆனால் அங்கு டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்போது பணியில் இருந்த நர்ஸ், நிறை மாத கர்ப்பிணி பெண் கவிநிலாவை காக்க வைத்துள்ளார். தொடர்ந்து டாக்டருக்கு தகவல் அளித்தும் வரவில்லை என கூறப்படுகிறது.
உயிரிழந்த பச்சிளங்குழந்தை:
இதையடுத்து கவிநிலாவுக்கு நேற்று நள்ளிரவு சுமார் 12:30 மணிக்கு அதிக வலி எடுத்துள்ளது. உரிய நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படாததால், ஆபத்தான நிலை உருவானது. இதையடுத்து கவிநிலாவை அவரது உறவினர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அவசர, அவசரமாக அழைத்து வந்துள்ளனர். அங்கு நிறைமாத கர்ப்பிணி கவிநிலாவை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை வயிற்றில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து கவிநிலாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க டாக்டர்கள் சுமார் 5 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் வயிற்றில் இறந்த நிலையில் இருந்த ஆண் குழந்தையை வெளியில் எடுத்தனர்.
சாலை மறியல்:
இந்நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு, கவிநிலாவின் உறவினர்கள், நாட்டுச்சாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர் முறையாக இல்லாததால், உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் குழந்தை இறந்ததாகவும், அலட்சியமாக இருந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்ககோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் ராமச்சந்திரன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார. அப்போது சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மறியலை கவிநிலாவின் உறவினர்கள் கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், அரசு டாக்டர்கள் இவ்வாறு அலட்சியம் காட்டியதால் அந்த கர்ப்பிணி பெண் தன் குழந்தையை இழந்துள்ளார். இதனால் அவரது மனம் எந்தளவிற்கு வேதனைக்கு உள்ளாகி இருக்கும். மேலும் வயிற்றிலேயே குழந்தை இறந்து அதை வெளியில் எடுக்க 5 மணிநேரம் ஆகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு ஒரு தீர்வு ஏற்படும் என்று தெரிவித்தனர்.