மயிலாடுதுறையில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு எதிராக தொடரும் போராட்டம்
திருவிளையாட்டம் கிராமத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய் சேமிப்பு கிடங்கை உடனடியாக அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் .
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிளையாட்டம் கிராமத்தில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராட்சத குழாய்களை இறக்கி சேமிப்புக் கிடங்கை அமைத்துள்ளனர். டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்று ராட்சத குழாய்களை இறக்கி இருப்பதைக் கண்டு அப்பகுதி கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனிடையே திருவிளையாட்டம் பகுதியில் அமைந்துள்ள ராட்சத குழாய் சேமிப்புக் கிடங்கை உடனடியாக அகற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அமைத்துள்ள சேமிப்புக் கிடங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ராட்சத குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்த கோரி சேமிப்பு கிடங்கு முன்பு கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் காவல்துறையினர் மற்றும் தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வார காலத்திற்குள் அனைத்து ராட்சத குழாய்களும் அகற்றப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். ஒரு வாரத்துக்குள் அகற்றாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அறிவித்துள்ளனர்.
இதேபோன்று கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா அருவாப்பாடி ஊராட்சி, வை.பட்டவர்த்தி கிராமத்தில் நீடுரை சேர்ந்த அமீனுல்லா என்பவருக்குச் சொந்தமான இடத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ராட்சத குழாய்களை இறக்குவதற்கான கிடங்கை ஏற்படுத்தி 9 ஆயிரம் ராட்சச குழாய்களை இறக்கி வைப்பதற்கான பணிகளை கடந்த வாரம் துவங்கியது. அதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அந்நிறுவனம் ஐந்துக்கு மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் ராட்சத குழாய்களை கொண்டு வந்து அப்பகுதியில் இறக்கினர். இதையடுத்து குழாய்களை அப்புறப்படுத்தக் கோரி நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அந்த இடத்தில் மக்கள்திரள் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர். இந்த சூழலில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறையினர், மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார். பொதுமக்களுக்கு நடத்திய அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ராட்சத குழாய்களை அப்புறபடுத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கிராம மக்களும் பல்வேறு தரப்பு பற்றி கூறவும் உறுதிபட தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, கிராம மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அந்த இடத்தில் இறக்கி வைத்திருந்த ராட்சத குழாய்களை மீண்டும் கனரக வாகனங்களில் ஏற்றிச்சென்ற நிலையில் தற்போது திருவிளையாட்டம் கிராமத்தில் கிடங்கு அமைத்துள்ளது குறிப்பிட்டதக்கது.