தஞ்சாவூரில் ரூ.30.50 கோடியில் மினிடைடல் பூங்கா - எத்தனை ஏக்காரில் எங்கு அமைகிறது தெரியுமா?
தஞ்சாவூரில் ரூ.30.50 கோடியில் மினிடைடல் பூங்கா கட்டுமான பணியை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ரூ.30.50 கோடியில் மினிடைடல் பூங்கா கட்டுமான பணியை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் திகழும் டைடல் பூங்கா நிறுவனம், 1996-2001 ஆட்சிக் காலத்தில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியால் நிறுவப்பட்டது. இது, மாநிலம் முழுவதும் தகவல் தொழில் நுட்பத்துறையில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட வித்திட்டது.
தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பத்துறையின் சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தும் வகையில், தற்போது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி பரப்புள்ளதாக மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை, டைடல் பூங்கா நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து டைடல் நியோ என்ற சிறப்பு நோக்க நிறுவனம் மூலமாக அமைக்கப்பட்டு வருகின்றன.
விழுப்புரம் மற்றும் திருப்பூர் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு கடந்த 24.06.2022 அன்றும், வேலுார் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு கடந்த 18.02.2023 அன்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அவற்றின் கட்டுமான பணிகள் தற்போது வெகு வேகமாக நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தூத்துக்குடி, தஞ்சாவூர், மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்களின் கட்டுமான பணிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கலெக்டர் உட்பட அனைவரும் மினி டைடல் பூங்காவின் கட்டுமான பணிகள் வரைபடத்தை பார்வையிட்டனர். தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே மேல வஸ்தாசாவடியில் அமைய உள்ள மினி டைடல் பூங்கா 3.40 ஏக்கரில் ரூ.30.50 கோடி செலவில், தரை மற்றும் மூன்று தளங்களுடன் 55,000 சதுர அடி கட்டுமான பரப்பளவுடன் நிறுவப்படும். இந்த மினி டைடல் பூங்காக்கள் மூலம் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்கள் அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே தங்கி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தவும் மற்றும் அப்பகுதிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சி மேம்படவும் வழிவகுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.