கும்பகோணத்தில் சாமந்தி பூக்கள் விலை கடும் வீழ்ச்சி - தினமும் 2 டன் பூக்கள் குப்பையில் கொட்டும் அவலம்
’’ஒரு கிலோ சாமந்தி பூக்கள் 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த நிலையில், நேற்று 40 ரூபாய்க்கு விற்பனையானது’’
தஞ்சை மாவட்டத்தில் சுந்தரபெருமாள்கோயில், பட்டீஸ்வரம், தேனாம்படுகை, திருமேற்றழிகை மற்றும் அரியலுார், பெரம்பலுார் மாவட்டத்தில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் சாமந்தி பூ சாகுபடி செய்வார்கள். ஆனால் தொடர் மழை மற்றும் சீதோஷன மாற்றம் காரணத்தால், சாமந்திபூ சாகுபடியை தாமதமாக சாகுபடி செய்தனர். இதனால் கும்பகோணத்திற்கு சாமந்திபூ வரத்து இல்லாமல் போனது. இதனை கருத்தில் கொண்டு கும்பகோணம் மலர் மார்கெட் மொத்த வியாபாரிகள், வெளி மாவட்ட சாமந்திபூவை விற்பனைக்காக இறக்குமதி செய்தனர்.
தொடர்ந்து ஒசூர், தேன்கணிக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் விளைச்சல் அதிகமானதால், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுமார் 30 டன் சாமந்தி பூக்கள் கும்பகோணம் மார்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக வருகின்றன. ஆனால் சாமந்தி பூக்களின் வரத்து அதிகமானதால், அப்பகுதியிலுள்ள மலர் விவசாயிகள், பூக்களை கும்பகோணம் பூ மார்கெட்டிற்கு விற்பனைக்காக, லாரிகளில் கொண்டு வந்துள்ளார்கள்.
சாமந்திபூ, லாரிகளில் வருவதால், பகலில் வெயில் மற்றும் இரவில் பனியினால், வரும் பூக்கள் சுருங்கியும், காய்ந்தும், இதழ்கள் உதிர்ந்து வருவதால், போதுமான விலை இல்லாமல் போனது. இதே போல் அனைத்து கடைகளிலும் சாமந்தி பூக்கள் அதிகமாக சாக்குகளில் கொட்டி வைத்திருப்பதால், சாக்கின் சூட்டினால், பூவின் தன்மை மாறி விடுகிறது. இதனால் தொழிலாளர்கள், சூடு ஏறாமல் இருக்க குழுக்கி விட்டு, சூட்டை தணித்து விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கும்பகோணம் மலர் மார்கெட்டில் ஒரு கிலோ சாமந்தி பூக்கள் 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த நிலையில், நேற்று கிலோ சாமந்தி பூக்கள் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் பூக்கள் விலை போகாததால், கும்பகோணம் பூ மார்கெட்டிற்கு வரும் சுமார் 30 டன் சாமந்தி பூக்களில், தினந்தோறும் சுமார் 2 டன் பூ வீணாகி வருகின்றது. சில நாட்களில் குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில வியாபாரிகள், பூவை கீழே கொட்டாமல் இருப்பதற்காக, சாலையில் திரியும் மாடுகளுக்கு உணவாக வழங்கி விடுகிறார்கள். கும்பகோணம் சுற்றுப்பகுதியிலுள்ள சாமந்திபூ வரத்து ஏற்பட்டால், வெளி மாவட்டத்திலிருந்து வரும் பூக்களின் விலை மேலும் வீழ்ச்சியடையும் என மலர் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.