டெல்டா மாவட்டத்தில் நடந்து வரும் தூர்வாரும் பணிகள் - பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின்?
இந்த ஆண்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு மேல் நீடித்து வருவதால், வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையை திறக்க உள்ளார்.
தஞ்சாவூர்: வரும் 6ம் தேதி காவிரி டெல்டா மாவட்டத்தில் நடந்து தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு சிறப்பு தூர்வாரும் பணிக்காக தமிழக அரசு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 37 ஆறுகள், 1,970 கி.மீ தொலைவுக்கும், 21,629 கிளை வாய்க்கால்கள் 24,524 கி.மீ தொலைவுக்கும் அமைந்துள்ளன.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கும் சென்று சேரும் வகையில், தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அந்த வகையில் நடப்பாண்டு காவிரி பாசனப் பகுதிகளான திருச்சி மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் 636 தூர்வாரும் பணிகளை 4,004 கி.மீ தொலைவுக்கு மேற்கொள்ள ரூ.80 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுவதன் மூலம், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த ஆண்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு மேல் நீடித்து வருவதால், வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையை திறக்க உள்ளார்.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை வரும் 6ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டை சிப்காட்டில் வரும் 5ம் தேதி மாலை நடக்கும் பாராட்டு விழாவில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின் பின்னர் காரில் சென்று இரவு திருவாரூரில் தங்குகிறார்.
வரும் 6ம் தேதி திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் தூர் வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் முதல்வர் காரில் புறப்பட்டு திருச்சி வந்து விமானத்தில் சென்னை செல்ல இருப்பதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, அம்மாபேட்டை உட்பட தூர்வாரும் பணிகள் நடக்கும் இடங்களை முதல்வர் ஆய்வு செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கான பணிகள் குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்தாலோசனை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.