தூங்கிக் கொண்டிருக்கும் அரசுக்கு விடியல் என்று பெயர் - பாஜக செய்தி தொடர்பாளர் சீனிவாசன் கிண்டல்
’’நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வேண்டுமா? வேண்டாமா என்பதை மாநிலத் தலைவர் முடிவு செய்வார்’’
தஞ்சாவூரில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக மாநில பொது செயலாளர் சீனிவாசன், மனுக்களை பெற்று கொண்டு, செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், பாஜக நகர புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி விட்டது. இதற்கான விருப்ப மனு பெறும் பணிகள் வரும் நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கப்பட்டு வரும் 26ஆம் தேதி வரை நடக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் விருப்ப மனு பெறும் பணியை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் தொண்டர்கள் எவ்வாறு உற்சாகமாக தேர்தலை சந்திக்க உள்ளனர் என்பது தெரிகிறது. நகர்புற உள்ளாட்சி தேர்தலை வலிமையுடனும், தன்னபிக்கையுடன் சந்திக்க உள்ளோம்.
தமிழகத்தில் தொண்டர்களுடன் நடந்த பல்வேறு கலந்துரையாடலின் போது, பா.ஜ.,நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு, தங்களின் பலத்தை காட்ட வேண்டும். நமது கட்சியின் வலிமை என்பதை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு அதன் மூலம் புரிய வைக்க வேண்டும். எனவே, எந்த கட்சியுடனும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வேண்டாம் என்கிற கருத்து தொண்டர்களிடம் கனிசமாக உள்ளது. இருப்பினும் சிலர் கூட்டணி வேண்டும் என்கிறார்கள். இதை நாங்கள்உரிய முறையில் மாநில தலைமையிடம் கூறி முடிவு எடுக்கப்படும். ஆனால், மாநில தலைமை எடுக்கும் இறுதி முடிவுக்கு நாங்கள் கட்டுபடுவோம். கூட்டணி வேணுமா, வேண்டாமா என்பதை மாநில தலைவர் முடிவு செய்வார்.
வருகிற 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல் குறைப்பதற்காக பா.ஜ.,சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் பா.ஜ.க போராட்டம் செய்தால் தான் செய்கிறார். இதனால் வார விடுமுறை நாட்களில் கோவில் திறக்க போராட்டம் நடத்தியது, பிறகு தான் கோவிலை அரசு திறந்தது, முல்லை பெரியார் அணை விவகாரத்தில் போராட்டம் அறிவித்த பிறகு தான், அமைச்சர் துரைமுருகன் அணையை பார்வையிட சென்றார். அதுவரை முல்லை பெரியார் அணை விவகாரத்தில் தமிழக அரசு துாங்கிக்கொண்டிருந்தது. இப்படி துாங்கிக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு விடியல் அரசாங்கம் என்ற பெயர் வெட்ககேடானது. தற்போது மத்திய வரியை குறைந்த நிலையில், பா.ஜ., ஆளும் மாநிலங்களில் எல்லாம் வரி குறைக்கப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ஸ்டாலின் அரசு விலையை குறைக்காமல் இருப்பது நியாயமல்ல. நிச்சயம் எங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளுவர் என நம்புகிறோம். அதன் பிறகு தமிழகத்தில் பெட்ரோல்,டீசல் விலை குறையும்.
தி.மு.க., அரசு பா.ஜக போராட்டத்திற்கு பிறகு தான் தனது தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளுகிறது. வேளாண் சட்டங்களை பொறுத்தவரை பாஜக செய்தது தவறு என்பதை இதுவரை நினைக்கவில்லை. சரியானது என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம். வேளாண் சட்டம் குறித்து புரிதலை கொண்டு வர இன்னும் காலஅவகாசம் வேண்டும் என்பதால் தற்போது வாபஸ் பெற்றுள்ளோம். சட்டங்கள் தவறு என்பதால் அல்ல. இதை வாய்ப்பாக பயன்படுத்தி காங்கிராஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசத்தில் மக்களிடம் பிளவு மனபான்மையை உருவாக்கி வருகிறார்கள். விவசாயிகள் வேளாண் சட்டத்தை முழுமையாக புரிந்து கொண்ட பிறகு, மீண்டும் விவசாயிகள் கூறி திருத்தங்களுடன் அமலப்படுத்தப்படும். ஆகவே தி.மு.க., மாற்றி கொள்ளுவது வேறு, பா.ஜ., மாற்றிக்கொள்ளுவது என்பது வேறு.
தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு மத்திய உள்துறை அமைச்சரிடம் நிவாரணம் கேட்டு மனு அளித்துள்ளார். இந்த நிவாரணம் வழங்குவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று தேசிய பேரிடர் நிவாரண தொகை, மற்றொன்று மாநில பேரிடர் நிவாரண தொகை. தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் என்பது தேசிய பேரிடர் இல்லை. மாநில பேரிடர் தான். இருப்பினும் மத்திய, மாநில பேரிடர் வழிகாட்டுதலின் படி நிவாரணம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மழை வந்த பிறகு தான் முதல்வர் ஸ்டாலின் வேட்டியை மடிச்சு கட்டிக்கொண்டு வீடு வீடாக போகிறார். ஆனால் மழை வருவதற்கு முதல் நாள் பிரதமர் மோடி, ஸ்டாலினை தொடர்புக்கொண்டு மழை வெள்ளத்தால் தமிழகம் பாதிக்ககூடாது என்பற்கான தேவையான நடவடிக்கையை மத்திய அரசு செய்து தருகின்றார் என தெரிவித்தார்.
ஆனால் அதை வெளியே சொல்ல முதல்வர் ஸ்டாலினுக்கு மனசு இல்லை. மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கை வைக்கும் தி.மு.க., அரசு ஆந்திராவில் நடந்த தென்மாநில முதல்வர் மாநாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் ஏன் செல்லவில்லை. மற்ற மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்ள முடியாத சூழலில், மூத்த அமைச்சர் ஒருவரை அனுப்பி வைத்தனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் 9ஆவது இடத்தில் உள்ள ஜூனியர் அமைச்சர் ஒருவரை அனுப்பி வைத்துள்ளார். உள்துறை அமைச்சரை நாங்கள் புறக்கணிப்போம் என ஸ்டாலின் கூறுவது என்ன நியாயம். இதை பா.ஜ., வண்மையாக கண்டிக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்றார்.