தஞ்சாவூர் பகுதியில் சுற்றித்திரியும் காட்டெருமை... அச்சத்தில் மக்கள்! தேடுதல் பணியில் வனத்துறையினர்
தஞ்சை அருகே பல இடங்களில் சுற்றித்திரிந்து காட்டெருமை மக்களை வெகு அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சுங்கான்திடல், கோடியம்மன் கோயில், மாரியம்மன் கோயில் பகுதியில் காட்டெருமை சுற்றி வந்துள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சுங்கான்திடல், கோடியம்மன் கோவில், மாரியம்மன் கோயில் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டெருமையை கண்டு மக்கள் அச்சப்பட்டு ஓடினர். இந்நிலையில் காட்டெருமையை பிடிக்க தஞ்சை வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
தஞ்சை அருகே பல இடங்களில் சுற்றித்திரிந்து காட்டெருமை மக்களை வெகு அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தஞ்சையின் முக்கிய பகுதிகளான சுங்கான்திடல், கோடியம்மன் கோயில், மாரியம்மன் கோயில் பகுதியில் ஒரு காட்டெருமை சுற்றி வந்ததுள்ளது. இதை கண்ட அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வனத்துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் வனசரக அலுவலர் ரஞ்சித், வனவர் இளையராஜா, ரவி,மணிமாறன் ஆகியோர் நான்கு குழுக்களாக பிரிந்து, பொதுமக்கள் கூறிய பகுதிகளில், காட்டெருமை குறித்து நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும், காட்டெருமை நடமாட்டம் குறித்து ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையில், நேற்று காலையில், மாரியம்மன்கோயில், வேளாண் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள காட்டுத்தோட்டம், தளவாய்பாளையம் பகுதிகளில் இருப்பதாக பொதுமக்கள் வனத்துறைக்கு அளித்த தகவலின் பேரில், அங்கும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் கால்நடைகளை வீட்டிற்கு வெளியே கட்டி வைக்க வேண்டாம், காட்டெருமை வந்தால், அதனை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வனத்துறையினர் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர். சில இடங்களில், காட்டெருமையின் கால்தடங்களை கண்டறிந்துள்ளனர். இதை போல, அருங்கானூயிர் காப்பு மற்றும் சுற்றுசூழல் அறக்கட்டளை அமைப்பினரும் வனத்துறைக்கு உதவியாக காட்டெருமையை தேடியுள்ளனர்.
இதுகுறித்து வனச்சரக அலுவலர் ரஞ்சித் கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தான் காட்டெருமை அதிகளவில் உள்ளன. இது இந்தியா கவுர் என்ற பெயர் கொண்டவை. இது மிகவும் மென்மையான மிருகம். மனிதன் அதை மிரள செய்தால் மட்டுமே தாக்க முயலும்.
இந்த காட்டெருமை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலையான திருச்சி பச்சைமலை, அரியலுார் மலை பகுதி வழியாக, கொள்ளிடம் ஆற்றுப்படுகை வழியாக நமது பகுதிக்கு வந்து இருக்கலாம். கடந்த சில மாதங்களுக்கு மயிலாடுதுறையில் சிறுத்தை ஆற்றுபடுகை வழியாக தான் வந்தது. கடந்த ஓராண்டுக்கு முன்பு திருவாரூர், நாகை மாவட்டத்திலும் ஒரு காட்டெருமை வந்ததாக தகவல்கள் உள்ளன. பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. நடுத்தர வயதுடையதாகத் தெரியும் இந்தக் காட்டெருமை யாரையும் முட்டவோ, பொருட்களைச் சேதப்படுத்தவோ இல்லை. இதனிடையே, காட்டெருமையைப் பிடிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பூதலூர் அருகே வளம்பக்குடி கிராமத்துக்குள் வந்த காட்டெருமை பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது. வழித்தவறி வரும் காட்டெருமைகள் திட்டமிட்டு மனிதர்களை தாக்குவதில்லை. பசி என்பது எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படையானது. உணவுப் பற்றாக்குறை ஏற்படும்போது, அவை வாழும் இடங்களைவிட்டு வெளியேறுகின்றன. விளைநிலங்களுக்குள்ளும், ஊருக்குள்ளும் அவை நுழையும் வேளையில் மனிதர்கள் அவற்றை விரட்டும்போது, மனிதர்களைக் கண்டால் தாக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு காட்டெருமைகளிடம் வலுவடைந்துவிடுகிறது. அதுபோல்தான் தஞ்சை பகுதியில் சுற்றித்திரியும் காட்டெருமை யாரையும் தாக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

