தஞ்சாவூரில் நடந்த மண்டலாபிஷேகத்தில் பக்தி பரவசத்தில் ஆடிய ஐயப்ப பக்தர்கள்
தஞ்சை ஸ்ரீ பால சாஸ்தா வழிபாட்டு குழு சார்பில் 16ம் ஆண்டு மண்டல அபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஐயப்பனின் தாய் அவதாரமான விஷ்ணு அலங்காரத்தில் ஐயப்பன் காட்சியளித்தார்.

தஞ்சாவூர்: தஞ்சையில் நடந்த மண்டலாபிஷேகத்தின் போது விஷ்ணு அலங்காரத்தில் அவதரித்த ஐயப்பன் அலங்காரத்தை கண்டு பக்தி பாடல்கள் பாடி வழிபாடு நடத்தி பரவசத்தில் சாமி ஆடிய பக்தர்களால் அந்த இடம் பக்தியில் மூழ்கியது.
தஞ்சையில் ஶ்ரீபாலசாஸ்தா வழிபாட்டு குழு சார்பில் 16ம் ஆண்டு மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. கார்த்திகை மாதத்தை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து மலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மண்டல அபிஷேகம் செய்து அதன் பின் சபரிமலை செல்வார்கள்.

தஞ்சை ஸ்ரீ பால சாஸ்தா வழிபாட்டு குழு சார்பில் 16ம் ஆண்டு மண்டல அபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஐயப்பனின் தாய் அவதாரமான விஷ்ணு அலங்காரத்தில் ஐயப்பன் காட்சியளித்தார். கடந்த ஆண்டு 1 லட்சத்து 8 ருத்ராட்சங்களால் அலங்கரிக்கப்பட்ட லிங்கத்தின் ஐயப்பன் அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு விஷ்ணு அவதாரத்தில் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி ஐயப்பனை வழிபட்டனர்.
அப்போது தரிசனம் செய்ய வந்த பெண்கள் சிலர் அருள் வந்து பக்தி பரவசத்தில் ஆடினர். தொடர்ந்து மண்டலபிஷேகத்திற்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கார்த்திகை மாதம் துவங்கியதும், தமிழ்நாட்டில் உள்ள பக்தர்கள் சபரிமலைக்கு ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது.
கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
சபரிமலை செல்பவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19ம் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிவார்கள். கார்த்திகை மாதம் முதல் நாள், மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.
மாலை, துளசி மணி 108 கொண்டதாகவோ, உருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி, அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிவார்கள். தாய், தந்தையின் நல்லாசியுடன், குருசாமி ஒருவரின் கையால் கோயிலில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம்.
இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம். இவ்வாறு மாலை அணிந்த பின்பு கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக்கூடாது. அக்கம்பக்கத்தினருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.
காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி கோவில்களிலோ, வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வணங்க வேண்டும். இத்தகைய பக்தியுடன் சபரிமலைக்கு விரதம் இருந்து மாலை அணிபவர்கள் மண்டலாபிஷேகம் நடத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















