ABP NADU IMPACT: மயிலாடுதுறையில் திறக்காத அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்த ஆட்சியர்
சேமங்கலம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெல்லுடன் விவசாயிகள் காத்திருந்த செய்தி எதிரொலியாக கொள்முதல் நிலையம் இன்று திறக்கப்பட்டது.
![ABP NADU IMPACT: மயிலாடுதுறையில் திறக்காத அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்த ஆட்சியர் ABP Nadu Impact Paddy Procurement Centre District Collector Takes Immediate Action by Opening the Paddy Procurement Centre mayiladuthurai TNN ABP NADU IMPACT: மயிலாடுதுறையில் திறக்காத அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்த ஆட்சியர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/10/2aec04369950dbad3303aa2861fc53031691653787403733_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு நீரைக் கொண்டு பம்பு செட்டு பயன்படுத்தி சுமார் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குறுவை சாகுபடி செய்த நெல்லை விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய கடந்த வாரம் குத்தாலம் தாலுக்கா மேக்கிரிமங்கலம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். அப்போது, மாவட்டம் முழுவதும் 119 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் படிப்படியாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள சேமங்கலம் கிராமத்தில் நிலத்தடி நீரைக்கொண்டு சுமார் 1000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், அருகாமையில் உள்ள கருவாழக்கரை, மருத்தூர் கிராமங்களில் சுமார் 500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1500 ஏக்கரில் அறுவடை செய்யப்பட்ட நிலையில் அந்த நெல் மணிகள் சேமங்கலம் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. விவசாயிகள் ஆடுதுறை 36, ஆடுதுறை 43, ஆடுதுறை 45, கோ 51 ஆகிய சன்ன ரக நெல் மற்றும் ஏஎஸ்டி 16 மோட்டோ ரக நெல் ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், சேமங்கலம் கிராமத்தில் கடந்த 20 நாள்களில் சுமார் 20 சதவீத அறுவடைப் பணிகள் நிறைவடைந்து, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி வைத்து, கொள்முதல் நிலையம் திறப்பதற்காக காத்து கிடந்தனர்.
நெல் கொள்முதல் நிலையம் திறக்க காலதாமதம் ஆவதால் விவசாயிகள் பலர் தனியாரிடமும் தங்கள் நெல்லை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலையும் நிலவியது. மேலும் தற்போது மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால், கொட்டி வைத்துள்ள நெல்லை இரவு நேரங்களில் தார்ப்பாய் கொண்டு மூடியும், பகல் நேரத்தில் வெயிலில் காயவைத்தும் நெல்லை பாதுகாக்க விவசாயிகள் கடுமையான போராடி வந்தனர். தற்போது, சுமார் 320 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக கொள்முதல் நிலையத்தை திறந்தால்கூட ஏற்கெனவே கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்லை கொள்முதல் செய்ய 10 நாட்கள் பிடிக்கும். இந்நிலையில், அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் வரும் நாட்களில் கூடுதல் நெல் விற்பனைக்காக கொண்டுவரப்படும் என்பதால் அரசு உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும், அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் கிடங்குக்கு கொண்டு சென்று விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விவசாயிகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நெல் கொள்முதல் நிலைமுன்பு முழக்கங்களை எழுப்பி கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து நேற்று முன்தினம் எபிபி நாடு செய்திதளத்தில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரிடம் தர ஆய்வாளர்கள் தற்போது நெல் வரத்து இல்லை எனவும், நெல் வரத்து அதிகரிக்க இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என தவறாக தெரிவித்ததால் நெல் கொள்முதல் நிலையம் கொள்முதல் நிலையம் திறப்பதில் காலதாமதம் என தெரிவித்ததாகவும், இதனை தொடர்ந்து தவறான தகவல் அளித்த தர ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நாளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிட்டுள்ளதாக ஏபிபி நாடு செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஆட்சியர் கூறியபடி இன்று அங்கு அரசு திறந்த வெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறத்துவைத்து கொள்முதலை தொடங்கி வைத்துள்ளார். மேலும் ஆட்சியரின் இந்த துரித நடவடிக்கைக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)