Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு அருகம்புல் மாலை எதற்காக? சுவாரஸ்யமான பின்னணி என்ன தெரியுங்களா?
புராணக் கதையின்படி, அனலாசுரன் என்ற அசுரன் தேவர்கள், முனிவர்கள் மற்றும் மக்களைத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அவனுடைய உடலில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தால் சுற்றியிருந்தவை பாதிக்கப்பட்டன.

விநாயகசதுர்த்தி: தஞ்சாவூர்: விநாயகர் வழிபாட்டில் மலர்களைக் காட்டிலும் அருகம்புல்லுக்கு தனி இடம் உண்டு. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி போன்ற சிறப்பு நாட்களில், விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவிப்பதும், அருகம்புல்லை வைத்து வழிபடுவதும் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பின்னணி என்ன? சுவாரஸ்யமான விஷயம் இருக்கு தெரியுங்களா?
புராணக் கதையின்படி, அனலாசுரன் என்ற அசுரன் தேவர்கள், முனிவர்கள் மற்றும் மக்களைத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அவனுடைய உடலில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு போன்ற வெப்பத்தால் சுற்றியிருந்த அனைத்தும் பாதிக்கப்பட்டன. அவனை எதிர்த்து போராடிய பலரும் அவனுடைய அசுர சக்தியை சமாளிக்க முடியாமல் தவித்தனர். திணறினர். பரிதவித்தனர்.
அப்போது தேவர்கள் விநாயகரை நாடி தங்களை காக்குமாறு வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற விநாயகர், அனலாசுரனை எதிர்த்து போரிட்டார். இறுதியில் அந்த அசுரனை வென்ற விநாயகர், அவனை விழுங்கி விட்டார். ஆனால் அசுரனை விழுங்கிய பிறகு விநாயகரின் உடலுக்குள் மிகப்பெரிய வெப்பம் ஏற்பட்டது. அனலாசுரனின் தீப்பொறி போன்ற சக்தி காரணமாக விநாயகருடைய உடல் முழுவதும் கொதித்துள்ளது. இந்த வெப்பத்தைத் தணிக்க தேவர்கள் பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டும் வெப்பம் தணியவில்லை.
சந்திரனை விநாயகரின் தலையில் வைத்தனர். இருப்பினும் அவருடைய உடல் வெப்பத்தைத் தணிக்க முடியவில்லை. அப்போது முனிவர்கள் சிலர் அருகம்புல்லை கொண்டு வந்து விநாயகரின் தலையிலும் உடலிலும் வைத்துள்ளனர். அருகம்புல்லை அர்ப்பணித்ததும் விநாயகரின் உடல் வெப்பம் தணிந்தது என்று புராண மரபு கூறுகிறது. இதனால் தான் விநாயகருக்கு அருகம்புல் மிகவும் பிரியமானதாகக் கருதப்படுகிறது.
அருகம்புல் சாதாரணமாகக் காணப்படும் ஒரு புல் என்றாலும், இந்திய மரபில் அதற்கு பல்வேறு சிறப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வெயில், வறட்சி போன்ற சூழல்களிலும் எளிதில் வளரக்கூடிய தன்மை அதற்கு உண்டு. ஒருமுறை வேரூன்றிய பின்னர் விரைவாகப் பரவி வளர்வதால், அது வாழ்வின் உறுதி, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
விநாயகர் வழிபாட்டில் அருகம்புல்லை படைப்பது, பெரிய அளவில் செலவு செய்து பூஜை செய்வதை விட எளிமையான பொருளாலும் இறைவனை மனமார வழிபடலாம் என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறது. மேலும், அருகம்புல் பல துண்டுகளாகப் பிரிக்கப்பட்டாலும் மீண்டும் வேரூன்றி வளரக்கூடிய தன்மை கொண்டது. அதனால் தடைகளைத் தாண்டி தொடர்ந்து வளர வேண்டும் என்ற வாழ்க்கைத் தத்துவத்திற்கும் இது எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
பல இடங்களில் விநாயகருக்கு 21 அருகம்புல் கொத்துகள் அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையில் அருகம்புல் சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது. இதற்கும் பல்வேறு சமய விளக்கங்கள் உள்ளன. 21 என்ற எண்ணிக்கை உடல், மனம், புலன்கள் உள்ளிட்ட பல அம்சங்களின் ஒருமைப்பாட்டைக் குறிக்கிறது என்று சில மரபுகள் விளக்குகின்றன.
அருகம்புல்லை மூன்று இலைகள் கொண்ட கொத்தாக எடுத்துச் சென்று விநாயகருக்கு அர்ப்பணிப்பதும் வழக்கமாக உள்ளது. இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட பக்தி மற்றும் மனத் தூய்மையே முக்கியம் எனவும் ஆன்மிக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். விநாயகருக்கு அருகம்புல் படைப்பதன் பின்னணியில் உள்ள கதை வெறும் புராணக் கதையாக மட்டும் பார்க்கப்பட வேண்டியதில்லை. மனித வாழ்க்கைக்கும் அது ஒரு அழகான செய்தியைச் சொல்கிறது.
எவ்வளவு பெரிய ஆற்றல் கொண்டவராக இருந்தாலும், சில நேரங்களில் இயற்கையின் எளிமையான ஒரு பொருளே நிம்மதியைத் தரக்கூடும். பெரிய அசுர சக்தியை அழித்த விநாயகரின் உடல் வெப்பத்தைத் தணித்தது ஒரு சிறிய புல் என்கிற கதை, சிறியதாக இருப்பது பலவீனம் அல்ல; இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் தனித்த சக்தி உண்டு என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
இதனால்தான் விநாயகர் கோவில்களில் இன்றும் அருகம்புல் முக்கியமான வழிபாட்டுப் பொருளாகத் தொடர்கிறது. அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்ட விநாயகரை தரிசிக்கும் பக்தர்கள், தடைகள் நீங்கி மன அமைதியும் வளமும் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்கின்றனர்.
அருகம்புல் ஒரு சாதாரண புல்லாகத் தெரிந்தாலும், அதன் பின்னால் பின்னப்பட்டிருக்கும் புராணக் கதை, இயற்கையின் மீது நம் முன்னோர்கள் கொண்டிருந்த மரியாதையையும், எளிமையின் மகத்துவத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு சுவாரஸ்யமான ஆன்மிகப் பாரம்பரியமாக விளங்குகிறது.
Before You Go
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
ட்ரெண்டிங் செய்திகள்





















