சட்டுன்னு வந்து வேண்டிக்கோங்க... பட்டுன்னு திருமண மாலை வந்து தோள் சேரும்: அந்த தலம் எது தெரியுங்களா?
கோயில் இறைவன் திருநாமம் மாங்கலீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. திருமண பாக்கியத்தைக் கொடுக்கிற கோயில் இது. இதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர்

தஞ்சாவூர்: திருமணம் ஆகலைன்னு வருத்தமா... அட என்னங்க இந்த தலத்துக்கு போய் வேண்டிக்கிட்டு வந்தா போதும் திருமணம் கைகூடும் என்று பலன் அடைந்த பக்தர்கள் கூறும் கோயில் எது தெரியுங்களா?
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அமைந்துள்ளது இடையாற்றுமங்கலம். இங்குள்ள மாங்கலீசுவரர் கோயில் பற்றி இன்னும் உங்களுக்கு தெரியலை என்றுதான் அர்த்தம். இக்கோயில் இறைவன் திருநாமம் மாங்கலீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. திருமண பாக்கியத்தைக் கொடுக்கிற கோயில் இது. இதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர் பக்தர்கள். இக்கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டு பலன் அடைந்தவர்கள் இதை உறுதியுடன் தெரிவிக்கின்றனர். திருமணத் தடையை நீக்கி தலமாக இருப்பதால்தான் இக்கோயில் சுவாமிக்கு மாங்கலீசுவரர் என்றும் அம்பாளுக்கு மங்கலாம்பிகை என்றும் திருநாமம் அமைந்தது என்கிறது தல புராணம்.

மாங்கல்யேசுவரர் என்பதுதான் மாங்கலீசுவரர் என மருவியது என்று விபரமறிந்த பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். மாங்கல்ய மகரிஷி என்பவர் இத்தலத்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். மாங்கல்ய மகரிஷி வேண்டுகோளுக்கு இணங்க, இங்கே தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சிவபெருமான், திருமண பாக்கியத்தை அருளுகிறார். இத்தலத்தில் மாங்கல்ய மகரிஷிக்கு தனி சந்நிதி உள்ளது. அவருடைய நட்சத்திரம் உத்திரம். பொதுவாகவே, உத்திர நட்சத்திரம் என்பது மாங்கல்ய வரம் தந்தருளக்கூடியது.
அதனால்தான் பங்குனி உத்திரத்தில் பல தெய்வங்களுக்கு திருமண வைபவங்கள் நடத்தப்படுகின்றன என்கின்றனர். மாங்கல்ய மகரிஷியும் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர். அதனால்தான் இந்தத் தலம் கல்யாண வரம் தரும் தலமாகப் பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையை பெற்று விளங்குகிறது.
இந்துக்கள் அச்சடிக்கும் திருமண அழைப்பிதழில் கையில் மாலைகளுடன் தேவதைகள் பறப்பது போல் படங்கள், இரண்டு பக்கமும் அச்ச்சிட்டிருப்பார்கள். அந்த தேவதைகளை திருமண வைபவத்துக்கு அனுப்புபவர் மாங்கல்ய மகரிஷி என்றும் திருமணமாகும் தம்பதிக்கு ஆசியும் அருளும் வழங்குகிறார் என்பது ஐதீகம்.
மாங்கலீசுவரர் கோயிலில் குறிப்பிட்ட நாளில்தான் வந்து வேண்டிக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. எப்போது வேண்டுமானாலும் வந்து வேண்டிக்கொள்ளலாம். இருப்பினும் உத்திர நட்சத்திர நாளில் வந்து, மாங்கல்ய மகரிஷியையும் மாங்கலீசுவரரையும் மங்களாம்பிகையும் தரிசித்து வேண்டிக் கொண்டால், திருமணத்தடைகள் பட்டென்று தெறித்து கல்யாணம் விரைவில் நடந்து விடும். அதேபோல், உத்திர நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருக்கோயில் இது. உத்திர நட்சத்திரக்காரர்கள் இங்கே வந்து வணங்கினால், முன் ஜென்ம தோஷம் உள்ளிட்டவை கூட நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
தவம் செய்யும் கோலத்தில் காட்சி தரும் மாங்கல்ய மகரிஷியை நெய் விளக்கேற்றி வழிபட்டு, சிவனையும் அம்பாளையும் மனதாரப் பிரார்த்தித்தால், சீக்கிரமே கல்யாண மாலை தோள் வந்து சேரும். மகரிஷியின் திருப்பாதத்தில் ஜாதகத்தை வைத்து வேண்டிக்கொள்வதும் இங்கே வழக்கமான நடைமுறையாக உள்ளது. திருமணம் நடந்தேறியதும் இங்கு வந்து சிவனுக்கும் அம்பாளுக்கும் மாங்கல்ய மகரிஷிக்கும் மாலைகள் சார்த்தி, இனிப்பு வகைகள், தேங்காய் முதலானவற்றை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள்.
இங்கு பிரார்த்தனை செய்து கொண்டால், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார். மாங்கல்ய பலம் பெருகும். மாங்கலீசுவரர், மங்களாம்பிகை, மாங்கல்ய மகரிஷி மூவருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து, சீப்பு, கண்ணாடி, புடவை அல்லது ரவிக்கை துண்டு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு என மங்கலப் பொருட்களை சுமங்கலிகளுக்கு வழங்கி வேண்டிக்கொண்டால், சகல தோஷங்களும் விலகி, திருமணம் விரைவில் நடைபெறும். அப்புறம் என்ன திருமணத் தடை உள்ளவர்கள் உடனே இத்தலத்திற்கு சென்று வழிபட்டு பாருங்கள்.





















