தந்த தானம் வாழ்வு முழுக்க நிலைக்கணும்... ராஜேந்திர சோழனின் மாண்பை விளக்கும் கரந்தை செப்பேடு
செப்பேடுகள் என்பவை பழங்காலத்தில் மன்னர்களின் கோயில் தானங்கள், வம்சாவழி (பரம்பரை) , போர்க்குறிப்புகள் போன்ற நிகழ்வுகளைப் பதிந்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உலோகத் தகடு ஆகும்.

தஞ்சாவூர்: மற்றவர்களை மண்டியிட வைக்கும் வீரமும், மற்றவர் நலனுக்காக எதை செய்யவும் தயங்காத நற்குணமும் சோழர்களின் பண்பாடு. இதை உயர்த்தி காட்டி நிற்கிறது கரந்தைச் செப்பேடு. செப்பேடா... அப்படின்னா என்னங்க என்கிறீர்களா? செப்பேடு பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கரந்தை செப்பேடு பற்றி பார்ப்போம்.
செப்பேடுகள் என்பவை பழங்காலத்தில் மன்னர்களின் கோயில் தானங்கள், வம்சாவழி (பரம்பரை) , போர்க்குறிப்புகள் போன்ற நிகழ்வுகளைப் பதிந்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உலோகத் தகடு ஆகும். இவை தற்காலத்தில் பழங்காலத்தைப் பற்றி அறியும் தொல்லியல் சான்றுகளாக இருந்து வருகின்றன என்பதுதான் உண்மை.
அந்த வகையில் பல செப்பேடுகளில் திருமாலின் அவதாரமாகக் காட்டப்படும் இராஜேந்திர சோழன், வைணவ அந்தணர்களுக்கு, திரிபுவனமாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில், ஒரு பெரும் கிராமத்தையே, அவர்களின் வாழ்வாதாரத்திற்காகத் தானமாக தந்ததைக் குறிப்பிடுகிறது கரந்தைச் செப்பேடு.
கிபி 1020ல் எழுதப்பட்ட இச்செப்பேடு, 57 இதழ்களைக் கொண்டது. இதழ்கள் ஒரு வளையத்தில் கோர்க்கப்பட்டு, இராஜேந்திர சோழனின் அரச முத்திரையோடு உள்ளது. அதில் ஒரு புலி, தனது இரு கால்களை மடக்கிய நிலையில் அமர்ந்திருக்கிறது. அதனுடைய வால், முன்னங்கால் வரை உயர்ந்துள்ளது. இது புலியின் வீரத்தையும், கோபத்தையும் இணைத்தே காட்டுகிறது.
பல சோழ அதிகாரிகளால் அலசப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, தானமளித்த நிலங்கள் அளக்கப்பட்டு, உரியவரிடம் தானநிலம் ஒப்படைக்கப்பட்டபின், செப்பேட்டில் எழுதப்பட்டது. வெறும் 173 நாளில், அரசனின் வாய்மொழி ஆணை முறையாக நிறைவேற்றப்பட்டு, பதியப்பட்டிருக்கிறது. இது அந்த நிர்வாகத்தின் வேகத்தையும், ஆற்றலையும், திறமையையும் காட்டுகிறது.
எதிரிகளுக்கு எமன், களத்தில் தயவுதாட்சண்யமே காட்டாதவன், தவறுகளுக்கு தண்டனையைத் தவிர வேறு எதையுமே பரிசாகத் தராதவன் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இராஜேந்திர சோழனின் மற்றொரு பக்கத்தை, கரந்தைச் செப்பேட்டின் சில வரிகள் கூறும்போது மனம் நெகிழ்ந்து தான் போகிறது.
பெரும்பற்றப்புலியூர் மாளிகையில் இராஜேந்திர சோழர் அமர்ந்திருக்கும் போது அமைச்சர் ஜனநாதன் என்பவர் 1080 அந்தணர்களுக்கு வேண்டி, நிலதானம் தருமாறு கோரிக்கை விடுக்க, அவரின் வேண்டுகோளினை ஏற்று, 57 கிராமங்களை ஒன்றிணைத்து, தன் தாயான திரிபுவனமாதேவியின் பெயரில் தானமாக வழங்குகிறார். அப்போது ஒரு வேண்டுகோளும் வைக்கிறார்.
தென்கிழக்காசிய நாடுகளை எல்லாம் வென்ற மாவீரன். கடல்கடந்து வெளிநாடுகளை வென்ற முதல் வீரன் ராஜேந்திர சோழன். அப்படி என்ன வேண்டுகோளை வைத்தார் தெரியுங்களா. இராஜேந்திர சோழனாகிய நான், உலகம் என்ற ஏரியில் விளையாடும் அன்னப்பறவை போன்றவன். தைரியம், அறிவு, அன்பு, செல்வம், இரக்கம் போன்றவை என்னிடம் அதிகம் உள்ளன.
புலவர்கள் என்னிடம் விவாதிக்கும்போது, அவர்களின் வார்த்தைகளில் உள்ள உண்மைகளுக்கு மதிப்பளிப்பவன். இப்பிறப்பிலும், மறுபிறப்பிலும் சொல்லப்படும் தத்துவங்கள் முழுதும் அறிந்தவன். அத்தகைய ராஜேந்திரன் ஆகிய நான், எதிர்காலத்தில் அரசனாக வருகின்றவர்களிடம் எனது தலைதாழ்த்தி, வணங்கி, யாசித்து வேண்டிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். நான் தருகின்ற இக்கொடையை தயவுசெய்து காப்பாற்றுங்கள்.”
ஏழை அந்தணர்களின் வாழ்வாதாரத்திற்காக தான் அளித்த நிலக்கொடை எக்காலத்திலும் காப்பாற்றப்பட்டு, தொடரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில், ஒரு மாபெரும் பேரரசன், அடுத்து வரப்போகும் அரசர்களின் காலில் விழுந்து யாசித்து கோரிக்கை வைக்கிறார். இதை உத்தரவாகவே இடலாம் என்ற நிலையிலும் அவ்வாறு செய்யாமல் வேண்டுகோளாக கோரிக்கையாக வைக்கும் ராஜேந்திர சோழனின் மாண்பு நெகிழ வைக்கிறது அல்லவா.
இதைத்தான் தெளிவுபடுத்தி இருக்கிறது கரந்தைச் செப்பேட்டு வரிகள். பேரரசனாக இருந்தாலும், மனித வாழ்வு நிலையில்லாதது என்பதை உணர்ந்து இருந்தார் ராஜேந்திர சோழன். கொடுத்த தானமும், அதனால் பயனடைந்தவர்களின் வாழ்வும் நிலைத்து நீடூழி நிற்கவேண்டும் என்பதற்காக, தனது நிலையை தாழ்த்தி யாசிக்கிறார்.
பெயரை சொன்னாலே மற்றவர்கள் நடுநடுங்க வைக்கும் வீரம் கொண்ட பேரரசன் மற்றவர் நலனுக்காக மண்டியிடத் தயங்காத நற்குணம் கொண்டு சிறந்து விளங்கியதை விளக்குகிறது கரந்தை செப்பேடு. இதுதானே சோழர்களின் பண்பாடு. அன்று செய்த செயல் இன்றும், இனி வரும் காலங்களிலும் அனைத்து சந்ததியினரும் தெரிந்து கொள்ள செப்பேடுகள் எவ்வளவு உதவுகின்றன என்பதற்கு கரந்தை செப்பேடு சாட்சியாக விளங்கி வருகிறது.





















