தஞ்சாவூர் மாவட்டத்தில் இடியும் நிலையில் 96 பள்ளி கட்டடங்கள் - ஒரு வாரத்தில் இடித்து முடிக்க உத்தரவு
தஞ்சை மாவட்டம் தோறும் பள்ளிகளில் உள்ள கழிவறை, சத்துணவு கூடம், பள்ளி வகுப்பறை, உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 96 கட்டிடங்கள் இடியும் நிலையில் உள்ளது. இதை ஒருவாரத்திற்குள் பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
நெல்லை பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்த பள்ளி கட்டிடங்கள், கழிவறைகள், சத்துணவு கூடங்கள், வகப்பறைகள், சுற்றுசுவர்கள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளையும் உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், பழுதான சிதிலமடைந்து, மிகவும் ஆபத்தான கட்டிடங்களை உடனடியாக பள்ளி விடுமுறை நாட்களில் பாதுகாப்பான வகையில் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன் படி, தமிழக முதல்வர் உத்தரவின்படி பள்ளிக்கல்வித்துறை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியது.அந்த வகையில் தஞ்சை அண்ணாநகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்த, பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், தஞ்சை மாவட்டம் தோறும் பள்ளிகளில் உள்ள கழிவறை, சத்துணவு கூடம், பள்ளி வகுப்பறை, உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் 1273 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், 727 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 2 ஆயிரம் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதுவரை 96 கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டு, அதனை இடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி கல்வித்துறையின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைந்துள்ள அனைத்து பள்ளி கட்டிடங்களை ஒரு வார காலத்திற்குள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிதிகளில் பள்ளி கட்டிடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து புதிய கட்டிடங்கள் வழங்கிட வேண்டும். மேலும் பள்ளிக் கல்வித் துறையின் அலுவலர்கள் அனைவரும் தங்களது கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து, சத்துணவு கூடத்திற்கு சென்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மகளிர் திட்ட அலுவலர் பாலகணேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.