தமிழகத்தில் மீன் குஞ்சுகள் 75 சதவீதம் உற்பத்தி - மீன்வளத்துறை அமைச்சர் பெருமிதம்
முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நேரத்தில் ஐ.டி.,ரெய்டு நடப்பது குறித்து நிருபர் ஒருவர் கேட்டதற்கு, ஐ.டி.ன்னா? என்ன என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மழுப்பலாக பதில் கூறியப்படி நழுவி சென்றார்.
தஞ்சாவூர்: தமிழகத்தில் மீன் குஞ்சுகள் 75 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்று மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் கரந்தையிலுள்ள நீர் வாழ் உயிரின ஆய்வுக் கூடத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்திலுள்ள அனைத்து ஆறுகள், குளங்களில் மீன் வளத்தை அதிகப்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மீன் வளத் துறை மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து ஆறுகள், குளங்களில் விடும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டாலும், ஆந்திரா உட்பட பிற மாநிலங்களிலிருந்து மீன் குஞ்சுகள் வாங்கக்கூடிய சூழ்நிலையும் இருந்து வந்தது. இந்த நிலைமைகள் தற்போது மாறி மொத்தமாக தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து பண்ணைகளிலும் மீன் குஞ்சுகள் உற்பத்தி செயப்படுகின்றன. இப்பகுதியில் மீன் உற்பத்தியை இன்னும் அதிகப்படுத்துவதற்கான ஆலோசனைகள் பெற்று நிறைவேற்றப்படும்.
மேட்டூர், தஞ்சாவூர், தாமிரபரணி ஆகிய பகுதிகளில் குஞ்சு பொறிப்பகங்கள் அதிகமாக உள்ளன. கடந்த காலங்களில் மீன் குஞ்சுகளை வெளி மாநிலங்களிலிருந்து அதிகமாக வாங்கி விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போது தமிழகத்திலேயே 75 சதவீதம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடல் மீன்கள் உள்பட ரூ. 6 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீன் பிடி தடை காலத்தில் மீன்வர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது. இத்தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் இந்த கோரிக்கை குறித்து கனிவுடன் நடவடிக்கை எடுப்பார். தஞ்சையில் கடல் பசு பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. அதற்கான நிதி பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும். மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
ரசாயனத்தைப் பயன்படுத்தி மீன்களைப் பதப்படுத்தினால், மீன் வளத் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நேரத்தில் ஐ.டி.,ரெய்டு நடப்பது குறித்து நிருபர் ஒருவர் கேட்டதற்கு, ஐ.டி.ன்னா? என்ன என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மழுப்பலாக பதில் கூறியப்படி நழுவி சென்றார்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.