Black Fungus : தஞ்சாவூரில் செவிலியர் உள்பட 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்
தஞ்சாவூர் மாவட்டத்தில் செவிலியர் உள்பட 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது, தினசரி 2.50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் கொரோனா தொற்று காரணமாக தினசரி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரம் அடைந்து வரும் இந்த மோசமான சூழலில், கருப்பு பூஞ்சை நோய் மக்களை அச்சுறுத்தி வருகிறது. ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ராஜஸ்தான், தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளது.
இந்த நோய் குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் கருப்பு பூஞ்சை நோய் ஏற்கனவே உள்ள நோய் என்றும், இந்த நோயினால் தமிழகத்தில் 50 பேர் பாதிக்கப்பட்டு, 41 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் கூறியிருந்தார். மேலும், கருப்பு பூஞ்சை நோய் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் 5 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2 ஆண்களுக்கும், தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு செவிலியரும், இரு ஆண்களும் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருப்பு பூஞ்சை நோய் என்பது சுற்றுப்புறத்தில் உள்ள பூஞ்சை கிருமிகள் நாசி வழியாக உடலுக்கு சென்று தொற்றை ஏற்படுத்தும். இந்த நோய் கண்களை கடுமையாக பாதிக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக உள்ளவர்களை இந்த நோய் எளிதாக தாக்கும். மேலும், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களையும் கருப்பு பூஞ்சை நோய் எளிதில் தாக்க வாய்ப்பு உள்ளது.