எப்போங்க ஆரம்பிப்பீங்க... 43 கி.மீ. தூரத்திற்கு புதிய பசுமை வழிச்சாலை குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை
ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டம் விவசாயம், பித்தளை பொருட்கள், பட்டு உற்பத்தி, பருத்தி சாகுபடி என பொருளாதாரத்தில் அதிகளவில் வளர்ச்சி இருந்து வருகிறது.

தஞ்சாவூர்: ஆறு ஆண்டுகள் கடந்து போயிடுச்சு. ஆனால் இன்னும் பணிகள் தொடங்கலையே என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளது எதற்காக தெரியுங்களா? தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் - சீர்காழி இடையே 43 கி.மீ. தூரத்திற்கு புதிய பசுமை வழிச்சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாரித்து 6 ஆண்டுகள் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை. இதுகுறித்துதான் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டம் விவசாயம், பித்தளை பொருட்கள், பட்டு உற்பத்தி, பருத்தி சாகுபடி என பொருளாதாரத்தில் அதிகளவில் வளர்ச்சி இருந்து வருகிறது. குறிப்பாக கும்பகோணம் கோயில்கள் நகரமாக இருந்து வருகிறது. குறிப்பாக கும்பகோணம்-மயிலாடுதுறை வழித்தடத்தில் சூரியனார் கோயில், கஞ்சனூர் சுக்கிரன் கோயில், வைத்தீஸ்வரன்கோயில், திருமணஞ்சேரி, திருக்கடையூர், திருநாங்கூரில் உள்ள திவ்ய தேச வைஷ்ணவ கோயில்கள் என ஏராளமான கோயில்கள் அமைந்துள்ளன.
இந்த தலங்களுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். இதனால் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக சீர்காழி வரை செல்லும் சாலை எப்போது போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். முக்கியமான கோயில்கள் அனைத்தும் சாலைக்கு குறிப்பிட்ட தூரத்தில் அமைந்துள்ளது. இதனால் விழாக்காலங்களில் கோயிலுக்கு வரும் வாகனங்கள் சாலையிலேயே அணிவகுத்து நிற்கிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
தற்போதுள்ள சாலைகள் அதிக வளைவுகளுடனும், குறுகலாகவும் இருப்பதால் அடிக்கடி விபத்துகளுடன் உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் உரிய நேரத்தில் சென்றடைய முடியவில்லை. வெளி மாநில சுற்றுலா பேருந்துகள் இங்குள்ள கோயில்களுக்கு வந்து செல்ல சிரமம் ஏற்பட்டு சுற்றுலா வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. இதனால் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக சீர்காழி வரை 52 கி.மீ தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகளான கிழக்கு கடற்கரை சாலை, தஞ்சை விக்கிரவாண்டி சாலையை இணைக்கும் வகையில் 100 அடி அகலம் கொண்ட புதிய தேசிய நெடுஞ்சாலையாக அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நவக்கிரக கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலமாக கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக சீர்காழிக்கு பசுமைவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 6 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த சாலை பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை பணியை விரைந்து முடிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், கும்பகோணம் - மயிலாடுதுறை வழியாக சீர்காழி செல்லும் சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளதால் புதிய பசுமை வழிசாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கும்பகோணத்தில் இருந்து சீர்காழி வரை 43 கி.மீ. தூரத்திற்கு பல கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால் 6 ஆண்டுகள் கடந்தும் இதற்கான பணிகள் தொடங்கவில்லை. பசுமைவழிச்சாலை அமைக்கப்பட்டால், ஆன்மீக சுற்றுலா வளர்ச்சிக்கும், கும்பகோணம், ஆடுதுறை இடையே நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு மாற்றாக அமையும்.
2028 மகாமக திருவிழாவிற்கு வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை கையாள தற்போது உள்ள கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக சீர்காழி செல்லும் சாலை போதுமானதாக இருக்காது. புதிய பசுமை வழிச்சாலை அமைக்கப்பட்டால் சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதி மக்கள் தஞ்சை, புதுக்கோட்டை, ராமேஸ்வரம் பகுதிகளுக்கு விரைவாக சென்று வர உதவியாக இருக்கும். ஆனால் இந்த பசுமை வழித்திட்டத்தை முன்னுரிமை இல்லாத திட்டமாக அறிவித்துள்ளனர். முன்னுரிமை திட்டமாக இருந்தால் தான் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்குவார்கள். புதிய பசுமை வழித்திட்டத்தை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும். கும்பகோணம், மயிலாடுதுறை மக்கள் பிரதிநிதிகள் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





















