தஞ்சை மாவட்டத்தில் இருந்து தருமபுரி, நாமக்கல், திருப்பூருக்கு 4 ஆயிரம் டன் நெல் சரக்கு ரயிலில் பயணம்
அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படுகிறது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி, நாமக்கல், திருப்பூருக்கு 4 ஆயிரம் டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகமும் நெல் சாகுபடிதான் முக்கியமானதாகும். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நெல் அறுவடை முடிந்த பின்னர் உளுந்து, பயறு போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொண்டு வருகின்றனர்.
கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடைப்பணிகள் வெகு தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், ராயந்தூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், ரெட்டிப்பாளையம், ராமநாதபுரம் பகுதிகளில் அறுவடைப்பணிகள் வெகு வேகமாக நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன. குறுவை சாகுபடி செய்யாமல் ஒரு போக சம்பா சாகுபடியை மேற்கொண்ட விவசாயிகள் அறுவடை முடித்து விட்டனர். சற்று தாமதமாக சம்பா, தாளடி மேற்கொண்ட இப்பகுதி விவசாயிகள் தற்போது அறுவடைப்பணிகளை கிடுகிடுவென்று முடித்து வருகின்றனர்.
அறுவடைப்பணிகளுக்காக திருவண்ணாமலை, விருத்தாச்சலம், பெரம்பலூர், சேலம், ஆத்தூர் உட்பட பல மாவட்டங்களில் இருந்து நெல் அறுவடை இயந்திரங்கள் ஏராளமாக வந்துள்ளதால் ராமநாதபுரம், 8.கரம்பை, ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளில் அறுவடைப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளது. உடனுக்குடன் அறுவடை நெல்லை டிராக்டரில் ஏற்றி வந்து கொள்முதல் நிலையங்கள் முன்பாக விவசாயிகள் காயவைத்து தூற்றும் பணிகளில் இறங்கி உள்ளனர்.
அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படுகிறது.
இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொது வினியோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
இந்தநிலையில் பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 4000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தஞ்சாவூரிலிருந்து தர்மபுரிக்கு 42 வேகங்களில் 2000 டன் நெல் மற்றும் கும்பகோணத்தில் இருந்து நாமக்கல், திருப்பூருக்கு 42 வேகங்களில் தலா 1000 டன் நெல் சரக்கு ரயிலில் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்