மூன்று நாள் இலவச பயிற்சி... சொந்தமாக தொழில் தொடங்க ஆலோசனை: எங்க? எப்போன்னு தெரிஞ்சுக்கங்க
இளைஞர்கள் மற்றும் பெண்களுக்காக சிறுதானிய பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சியை வழங்க இருக்காங்க.

தஞ்சாவூர்: ஏலேய் சோம்பேறி சொக்கநாதா... சுயதொழிலு தொடங்கணும், சுயதொழில் தொடங்கணும்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சா போதுமாடா உன்னை போல சுயதொழில் எதை தொடங்கறது. எப்படி செய்யறதுன்னு தெரியாம திரியற பயலுகளுக்காகவே செம சான்ஸ் வந்திருக்குடா. தமிழக அரசு பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வழங்குறாங்க. எங்கே, எப்போன்னு கேட்டுக்கிட்டு போய் முன்னேற வழிய பாருடா.
சோம்பேறி சொக்கநாதா: தாத்தா அப்படி சோம்பேறின்னு சட்டுன்னு சொல்லிடாதே. நானும் முயற்சி செஞ்சுக்கிட்டேதானே இருக்கேன்.
தகவல் தாத்தா தனபாலு: கிழிச்ச... வீட்டுக்குள்ள உட்கார்ந்து மோட்டுவளையை வெறிக்க பார்த்துக்கிட்டு இருந்தா முன்னேற முடியுமா. இப்ப தமிழக அரசு, சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்காக சிறுதானிய பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சியை வழங்க இருக்காங்க. சென்னையில் 3 நாள் நடக்கும் முகாமில் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகளும் சொல்றாங்க. போய் கத்துக்கிட்டு லோன் போட்டு வாழ்க்கையில முன்னேற பாரு.
சோ.சொக்கநாதா: அந்த முகாமு எங்க நடக்குது. நாம யாரை பார்க்கணும்னு டீடெய்லா சொல்லு தாத்தா.
தகவல் தாத்தா தனபாலு: நம்ம தமிழக அரசு இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கும் நோக்கில பல்வேறு சிறப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறது. சிறுதானியங்களை (மில்லெட்) வைச்சு பேக்கரி பொருட்கள் தயாரிக்க மூன்று நாள் இலவச சிறப்பு பயிற்சி முகாம் நடத்தறாங்கப்பா. வர்ற 25.11.2025 முதல் 27.11.2025 வரை 3 நாட்கள் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) வளாகத்தில் இந்த பயிற்சியை நடத்தறாங்க.
சோ. சொக்கநாதா: இதுல என்னனென்ன பயிற்சி கொடுக்கறாங்க. சொந்தமாக தொழில் தொடங்கற அளவுக்கு கத்துக்கலாமா?
தகவல் தாத்தா தனபாலு: இந்த பயிற்சியில், உடல்நலத்திற்கு நன்மை தரும் சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கக்கூடிய பல்வேறு பேக்கரி வகைகள் குறித்து கற்றுக் கொடுக்க இருக்காங்க. இதில் கோதுமை வெண்ணெய் பிஸ்கட், ராகி நட்ஸ் குக்கீ, கம்பு நெய் பிஸ்கட், கருப்பு கவுனி பாதாம் குக்கீ போன்ற பிஸ்கட் வகைகள், ராகி சாக்லேட் கேக், தினை வாழை கேக், சோளம் கேரட் கேக், மல்டி மில்லெட் ரொட்டி, பால் ரொட்டி போன்ற கேக் மற்றும் ரொட்டி வகைகள் அடங்கும். செய்முறை விளக்கத்தோடு, அரசு மானியங்கள், கடன் உதவிகள், தொழில் தொடங்கும் வழிமுறைகள் பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்படும்.
சோ.சொக்கநாதா: யார்ல பங்கேற்கலாம்? நானும் கலந்துக்க முடியுமா?
தகவல் தாத்தா தனபாலு: 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளலாம். சுயதொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. வெளி மாவட்டத்திலிருந்து வருபவர்களுக்கு குறைந்த வாடகையில் தங்கும் வசதியும் ஏற்பாடு செஞ்சு இருக்காங்க.
சோ.சொக்கநாதா: இதுக்கு எப்படி தாத்தா விண்ணப்பிக்கிறது. அதை பற்றியும் சொல்லிடுங்க.
தகவல் தாத்தா தனபாலு: கரெக்டா இப்பதான் நீ முன்னேறத்து பாதையை புடிச்சு இருக்க. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம். இதற்காக www.editn.in இணையதளத்தைப் பாரு. மேலும் விவரங்களுக்கு 8668102600 அல்லது 9943685468 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். சுயதொழில் கனவுடன் வாழ்வை முன்னேற்ற விரும்புவோருக்கு, இந்த அரசு பேக்கரி பயிற்சி சிறுதானிய வெற்றியின் சுவையான தொடக்கம் அப்படிங்கிறதை நினைவில் வைச்சுக்கோ.
சோ.சொக்கநாதா: தாத்தா இன்னைக்குதான் நீ உருப்படியான தகவலை சொன்ன. நானும் அந்த பயிற்சியில கலந்துக்கிறேன். இப்ப சிறுதானிய உணவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கு. இந்த நேரத்தில அரசே பயிற்சியும் கொடுத்து எப்படி தொழில் தொடங்கணும் அப்படிங்கிற வழியையும் காட்டறாங்க. விட்டுடுவேனா. இந்த பயிற்சியில நானும் கலந்துக்குவேன் தாத்தா.
தகவல் தாத்தா தனபாலு: நல்லதுப்பா. நம்ம வாலிப பசங்க சொந்த தொழில் செய்து முன்னேறினா போதும். நல்ல விஷயம் நடக்கிறத நம்மாள முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் சொல்வோம். போகும் போது இந்த விஷயத்தை உன் தோஸ்துகளுக்கும் சொல்லி விருப்பம் உள்ளவங்களை பதிவு செய்ய வைச்சு அழைச்சுக்கிட்டு போ.






















