தஞ்சையில் பயங்கர விபத்து... 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி
2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில், 7 பேர் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ருக்மணி கார்டன் எதிரே சனிக்கிழமை மதியம் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து ஒரு காரில் டிரைவர் உட்பட 4 பேர் தஞ்சை நோக்கி வந்தனர். இதேபோல் தஞ்சையிலிருந்து ஊரணிபுரம் நோக்கி மற்றொரில் காரில் 5 பேர் சென்றுள்ளனர். இந்த இரண்டு கார்களும் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ருக்மணி கார்டன் நேற்று மதியம் எதிரில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடன் வல்லம் டிஎஸ்பி நித்யா, இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். மேலும் 7 பேர் காயமடைந்திருந்தனர். தொடர்ந்து போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விபத்தில் இறந்தவர்கள் தஞ்சை மாவட்டம் ஊரணிபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த முகமது சுல்தான் என்பவரின் மகன் திமுக மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் சேட் முகமது (60), ஊரணிபுரம் காமராஜ் நகரை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் திமுக நகர செயலாளர் சஞ்சய் காந்தி (45) என்பதும் தெரிய வந்தது.
மேலும் காயமடைந்தவர்கள் ஒரத்தநாடு, புது விடுதி மேலத் தெருவை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் சுந்தர் (45), ஊரணிபுரத்தை சேர்ந்த குப்புசாமி மகன் ரமேஷ், உத்தமநாதன் மகன் ராஜா (42), மற்றொரு காரை ஓட்டி வந்த டிரைவர் மன்னார்குடி மேலவாசல் சோழன் நகரை சேர்ந்த சிவபுண்ணியம் மகன் கௌதமன் (36), கோவிந்தராஜ் மகன் செல்லபாண்டியன், மன்னார்குடி ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், மன்னார்குடி கூட்டுறவு சங்கத் தலைவர் வைத்தியநாதன் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் போக்குவரத்து குறைவாக இருந்த நிலையிலும் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு கார்களும் வெகுவாக சேதடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விபத்தை பார்த்த பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தஞ்சையிலிருந்து வந்த கார் மிக வேகமாக வந்தது. தஞ்சை நோக்கி சென்ற காரிலிருந்து உயிர் பாதுகாப்பு சாதனங்கள் வெளியானதால் அந்த காரில் வந்தவர்கள் காயம் மட்டும் அடைந்தனர் என்று தெரிவித்தனர்.