Kalimedu Chariot Accident : ’தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழப்பு’ உண்மையான காரணம் என்ன..? யார் இதற்கு பொறுப்பேற்பது..?
பழைய சாலையை தோண்டிவிட்டு புதிய சாலையை போடாமல் அதன் மேலேயே கூடுதல் உயரத்திற்கு சாலை போட்டது, மக்கள் புகார் அளித்தும் உயர் அழுத்த மின்சார கம்பி வழி தடத்தை மாற்றித் தராமல் அலட்சியம் செய்த மின்சார வாரியம்
தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் 94வது ஆண்டாக நடைபெற்ற அப்பர் கோயில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அனைத்து கட்சிகளும் நோட்டீஸ் அளித்துள்ளன.கடந்த 93 ஆண்டுகளாக நடைபெற்றும் இந்த விழாவில், முதன் முறையாக இப்படி ஒரு விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதியினரை பெரும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்திற்காக காரணம் என்ன ? விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரித்தோம்.
தஞ்சையில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது களிமேடு கிராமம். இங்குள்ள அப்பர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாதமும் சதய விழா 3 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம், அதன்படி 94வது ஆண்டாக இந்த ஆண்டும் விழாவிற்கு கிராம மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். நேற்று நடைபெற்ற தேர் திருவிழாவின்போது, நிலையில் இருந்து புறப்பட்ட தேர் களிமேடு கிராம எல்லையான கீழத்தெரு வந்து திரும்பவது வழக்கம். அதன்படி, கீழத்தெரு பகுதிக்கு வந்த தேருக்கு அந்த தெரு மக்கள் தேங்காய் உடைத்து கர்ப்பூரம் காட்டி வழிபடுவது நடைமுறையாக இருந்திருக்கிறது.
இந்த கீழத்தெரு பகுதிக்கு தேர் வந்தபோதுதான், உயர் மின் அழுத்த மின்சார கம்பியில் சப்பர தேரின் கூர்முனைபட்டு மின்சாரம் பாய்ந்திருக்கிறது. ஏதேனும் மரக்கிளைகளிலோ கம்பிகளிலோ தேரின் முனை படாமல் இருக்கும் வகையில், அந்த முனையை மடக்குவது போல அலங்காரம் செய்து (ஜோடனை) வடிவமைப்பது வழக்கம், அதே ரீதியில்தான் இந்த முறையும் தேர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அப்படி தேர் கீழத்தெருவிற்கு வரும்போது தேரின் முனையை மடக்குவதற்காக தேரில் அமர்ந்திருந்த 2 பேரும் ஞாபக மறதியோடு அதனை மடக்கமால்விட்டதால், அந்த முனை உயர் அழுத்த மின்சார கம்பியில் பட்டு அவர்கள் இருவர் மீது மின்சாரம் பாய்ந்துவிடுகிறது.
தேரில் ஜெனரேட்டர் மூலம் மின் விளக்குகள் பொறுத்தப்பட்டு அலங்காரம் செய்யப்படிருந்தாதால், அந்த ஜெனரேட்டரை ஆஃப் செய்ய முயன்ற நபரும் கண் இமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துவிடுகிறார். அதேபோல், தேரை வரவேற்று, தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி வழிபட காத்திருந்த கீழத் தெரு மக்கள், தங்கள் தெருக்களில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து வைத்திருந்ததால், அந்த இடமும் ஈரத்துடன் இருந்ததால், அதன் மூலம் தேரின் அருகே நின்றவர்கள் மூலம் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கின்றனர்.
இந்த விபத்திற்கு மிக முக்கியமான 3 காரணங்கள் :-
- களிமேடு கிராமத்தில் பஞ்சாயத்து சார்பில் போடப்பட்டுள்ள சாலை, பழைய சாலையை தோண்டி எடுக்கப்படாமல் அதன்மேலேயே 2 அடி கூடுதல் உயரத்திற்கு போடப்பட்டுள்ளது – அதனால், வழக்கம்போல அதே அளவில் அலங்காரம் செய்யப்பட்ட தேர், கூடுதல் உயரத்தில் உள்ள புதிய சாலையில் சென்றதால், உயர் அழுத்த மின்சார கம்பியில் தேரின் முனை பட்டிருக்கிறது.
- வழக்கமாக தேர் திருவிழா நடைபெற்றால் காவல் நிலையம், மின்சார வாரியம், தீயணைப்பு நிலையத்திற்கு முறையாக கடிதம் கொடுத்து அவர்களின் அனுமதி பெற வேண்டும். தேர் நிலையில் இருந்து கிளம்பி, விழா முடிந்து மீண்டும் மடம் வந்து சேரும் வரையில் மின்சாரம் துண்டிக்கப்படும். ஆனால், இது சிறிய சப்பர ரக தேர், அதுவும் ஒரு குக்குராமத்தில் 93 ஆண்டாக நடைபெறும் திருவிழா என்பதால் காவல்நிலையத்திற்கும் மின்சார வாரியத்திற்கும் வாய்மொழியாகவே ஊர் மக்கள் தகவல் கொடுத்திருக்கிறார்களே தவிர, கடிதமாக கொடுத்து பாதுகாப்பு கேட்கவில்லை. அதோடு, தீயணைப்பு நிலையத்திற்கு எந்த விதமான தகவலும் கொடுக்கப்படவில்லை.
- அதேபோல், மக்கள் நடமாடும் கிராம பகுதியில் உயர் அழுத்த மின்சார கம்பி லைன் போகக் கூடாது என்ற விதி இருந்தும், அதனை மீறி கிராமத்தின் நடுவே உயர் அழுத்த மின்சார கம்பி வடம் போடப்பட்டு, அதன்மூலம் திருவையாறு பகுதிக்கும் செல்லும் லைனில் இருந்து டவுன் பகுதிக்கு மின்சாரம் பிரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே மின்சார வாரியத்தில் முறையிட்டிருந்தும், மின்சார வாரிய ஊழியர்களின் அலட்சிய போக்கால் மக்களின் புகார் மீது எந்த் விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதோடு, அப்படி நாங்கள் இந்த லைனை மாற்றித் தரவேண்டுமென்றால் அதற்கான செலவு அனைத்தையும் கிராமே ஏற்க வேண்டும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் சொல்லியிருக்கின்றனர். இது தொடர்பாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து கிராம மக்கள் புகார் தெரிவிக்க இருந்த நிலையில் இந்த துன்பியல் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
எனவே
- தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவின்படி, பழையை சாலையை தோண்டி எடுத்துவிட்டு, புதிய சாலையை போடாமல் அதன்மேலேயே 2 அடி கூடுதல் உயரத்திற்கு சாலையை போட்டது
- உயர் அழுத்த மின்சார கம்பியை மக்கள் நடமாடும் கிராம பகுதியில் இருந்து மாற்றித் தர வைத்த களிமேடு மக்களின் கோரிக்கையை மின்சார வாரிய அதிகாரிகள் அலட்சியப்படுத்தியது
- திருவிழா குறித்து முறையாக காவல், மின்சார வாரியம், தீயணைப்பு நிலையத்திற்கு மக்கள் தகவல் சொல்லாதது.
இந்த 3 காரணங்களே 11 பேர் உயிர் பறிபோனதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.