கொரோனா பாதித்த ஐபிஎஸ் அதிகாரியை காரில் ஏற்ற மறுத்த டிரைவர்; டிரைவராக மாறி காப்பாற்றிய கலெக்டர்
கொரோனா பாதித்த ஐபிஎஸ் அதிகாரியை காரில் ஏற்றிச் செல்ல அவரது ஓட்டுனர் மறுத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் தனது சொந்த காரில் ஏற்றிச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக வெளி மாநிலங்களை சேர்ந்த பல ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாவட்டங்களில் நியமிக்கப்பட்டு உள்ளனர். மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கான பார்வையாளராக உ.பி., யை சேர்ந்த தரம் வீர் யாதவ் என்கிற ஐ.பி.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள காவல்துறை விடுதியில் தங்கியிருந்த அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.
உடனே தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு, தனது வாகன ஒட்டுனரிடம் தரம் வீர் யாதவ் உதவி கேட்டுள்ளார். மாவட்ட தேர்தல் அலுவலரால் நியமிக்கப்பட்ட அந்த ஓட்டுநர், கொரோனா பீதியால் அதிகாரியை காரில் ஏற்ற மறுத்துவிட்டார். செய்வதறியாது நின்று ஐ.பி.எஸ்., அதிகாரி, உடனே மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் உதவி கோரியுள்ளார். இந்த விவகாரத்தில் பணியாளர்களை நிர்பந்திப்பது தவறு என எண்ணிய மாவட்ட ஆட்சியர், தானே கொரோனா கவச உடை அணிந்து தனது சொந்த காரில் சென்று, தரம் வீர் யாதவ் ஐ.பி.எஸ்.,யை கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த டீன் சங்குமணி, ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு தேவையான மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்தார். அவர் தங்கியிருந்த அறை முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு, உடன் பணியாற்றிய நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டனர்.உயர் அதிகாரிக்கு உதவ பணியாளர்களே தயங்கிய நிலையில், துணிந்து வந்து டிரைவராக பணியாற்றி பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்த மாவட்ட ஆட்சியர் அன்பழகனின் சேவை மனப்பான்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.