ஸ்டாலின் என்றாவது நடப்பவர்; நான் எப்போதும் நடப்பவன் -எடப்பாடி பழனிச்சாமி இறுதி பரப்புரை
திமுக தலைவர் ஸ்டாலின் ஓட்டுக்காக நடந்து செல்பவர் என்றும், நான் எப்போதுமே நடந்து செல்பவன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது இறுதிகட்ட பிரசாரத்தில் உரையாற்றினார்.
சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தனது இறுதி கட்ட பிரசாரத்தை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திறந்தவெளி வாகனத்தில் இருந்தவாறு, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் முன்னிலையில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முதல்வர், ‛முதல்வரை பெற்ற மாவட்டம் என்கிற பெருமையை நமது பகுதி பெற்றுள்ளது. முதல்வர் வேட்பாளராக உங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர் நிற்கிறேன்.
எடப்பாடி வந்த ஸ்டாலின், நடந்து சென்று வாக்கு கேட்டதாக கூறினார்கள். ஸ்டாலின் ஒருமுறை தான் இந்த ஊருக்கு வந்துள்ளார். நான் வாரந்தோறும் வருகிறேன். அதிக முறை தொகுதிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன். ஸ்டாலின் என்றாவது தான் இங்கு நடந்து செல்வார்; நான் என்றுமே இங்கு நடந்து செல்வேன். எனது தாயை கொச்சைப்படுத்திய பேசிய திமுகவினர் ஆட்சியில் பெண்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும்,’ என கேள்வி எழுப்பி தனது இறுதிகட்ட பரப்புரையை எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்தார்.