கொள்கையை கேட்ட கார்த்திக் சிதம்பரம்: கொந்தளித்த நாம் தமிழர்
தனது பிரசாரத்திற்கு இடையூறாக துண்டு பிரசுரம் வழங்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியிடம் கட்சி கொள்கை குறித்து கார்த்திக் சிதம்பரம் கேட்டதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காட்டு தலைவாசல் பள்ளிவாசல் தொழுகை நடைபெறும் போது அங்கு வந்த காங்கிரஸ் எம்.பி., கார்த்திக் சிதம்பரம், அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதே இடத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் அமமுக நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை கடந்த கார்த்திக் சிதம்பரத்திடம் நாம் தமிழர் நிர்வாகி ஒருவர், துண்டு பிரசுரம் ஒன்றை வழங்கினார்.
அதை வாங்கிய கார்த்திக் சிதம்பரம், ‛உங்க கட்சிக்கு என்ன கொள்கை,’ என கேட்டுள்ளார். அதற்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி, ‛வேலையை கெடுக்காதீங்க...’ என கூறியுள்ளார். அங்கிருந்து நகர்ந்த கார்த்திக் சிதம்பரம், மீண்டும் அந்த நிர்வாகியை நோக்கி, ‛கொள்கை கேட்ட வேலையை கெடுக்காதீங்க என்பீர்களா,’ என , கேள்வி எழுப்பினார்.
கடுப்பான நாம் தமிழர் நிர்வாகி, ‛இந்த பாருங்க... தேவையில்லாம பேசாதீங்க...’ என கார்த்திக் சிதம்பரத்தை எச்சரிக்க, தொழுகைக்கு வந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி கார்த்திக் சிதம்பரத்தை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த பிரச்னை நடந்து கொண்டிருக்கும் போதே , கார்த்திக் சிதம்பரத்திடம் அமமுகவிற்கு வாக்களிக்குமாறு அக்கட்சி நிர்வாகி கேட்டதும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது