முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு..
முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் எனவும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நேற்று புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்த தமிழக அரசு, பேருந்துகளில் நின்று பயணம் செய்வதற்கு அனுமதி மறுத்தும், திரையரங்குகளில் 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டுமே நிரப்பப்படவேண்டும் எனவும், கோவில் திருவிழா, மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தது.
தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சியின் இன்றைய அறிவிப்பின்படி, முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாயும் அபராதம் விதித்துள்ளது.
மேலும், மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தற்பொழுது தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துகின்ற வகையில், தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், நேற்றைய தினம் தமிழக அரசின் சார்பில் கூடுதலாக சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படுகின்ற பேருந்துகளில், பொதுவாக 44 இருக்கை வசதியும், 25 பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்திட அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், தற்பொழுது தமிழக அரசால் பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுமக்கள் மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சிரமமின்றி பயணம் செய்திட ஏதுவாக, நாளை (10.04.2021) சனிக்கிழமை முதல், 300 முதல் 400 பேருந்தகள் வரையில் கூடுதலாக இயக்கப்படுகின்றன.