செல்ஃபியால் 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்.. 12 மணி நேர போராட்டம்.. திக் திக் நிமிடங்கள்!
செங்கல்பட்டைச் சேர்ந்த சிவகுருநாதன் கூடலூர் அருகே உள்ள நீடில் ராக் காட்சி முனைக்கு நேற்று சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த பாறையின் மீது நின்று செல்ஃபி எடுக்க முயன்று பள்ளத்தில் விழுந்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுற்றுலா சென்ற இளைஞர் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு 150 அடி பள்ளத்தில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே 13 மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த இளைஞர் மீட்கப்பட்டார்.
செங்கல்பட்டைச் சேர்ந்த சிவகுருநாதன் என்ற இளைஞர் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர் கூடலூர் அருகே உள்ள நீடில் ராக் காட்சி முனைக்கு நேற்று சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த பாறையின் மீது நின்று செல்ஃபி எடுத்ததாக சொல்லப்படுகிறது. அப்போது கால் இடறி 150 அடி பள்ளத்தில் விழுந்தார். இதனைக் கண்டு அப்பகுதிக்கு சுற்றுலா வந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கும், வனத்துறைக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிவகுருநாதனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் ஆனதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து குன்னூர் ராணுவ மீட்பு குழுவின் உதவியை கூடலூர் தீயணைப்புத் துறையினர் நாடினர். இதனைத் தொடர்ந்து நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா மாவட்ட நிர்வாகம் மற்றும் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் உள்ள உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இளைஞரை மீட்கும் பணியை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார். இரவு முழுவதும் மீட்பு பணி நடைபெற்ற நிலையில் இன்று காலையில் ராணுவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்றது.
இதன்மூலம் 13 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த இளைஞர் மீட்கப்பட்டார். உள்ளே விழுந்த சிவகுருநாதன் எழுந்து காப்பாற்றுமாறு சத்தமிட முடியாத அளவுக்கு கடுமையான காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முன்னதாக சிவகுருநாதனுக்கு முதலுதவி செய்யும் பொருட்டு உள்ளே ஊட்டச்சத்து பானம் வழங்கப்பட்டது. பாறையிலிருந்து மீட்கும் வரை அவருக்கு தேவையானவை செய்யப்பட்டதால் மீட்பு பணி சிரமிமின்றி இருந்ததாக மீட்பு படையினர் தெரிவித்தனர். ஒருவேளை சிவகுருநாதன் சுயநினைவின்றி போயிருந்தால் மீட்பதில் சிரமம் நீடித்திருக்கும் எனவும் சொல்லப்பட்டது.
ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது அந்த இளைஞர் சிகிச்சைப் பெற்று வருகிறார். ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானலில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை வைத்து மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படம் ரசிகர்களை குலை நடுங்க வைத்தது. கேரளாவில் வந்த நண்பர்கள் குழுவில் இடம்பெற்ற ஒருவர் குணா குகை அருகே இருக்கும் பள்ளத்தில் விழுந்தவரை உடன் சுற்றுலா வந்த நண்பன் காப்பாற்றிய சம்பவம் 2006ம் ஆண்டு நடைபெற்றது. இதுபோன்ற சுற்றுலா தலங்களிலும், ஆபத்தான இடங்களிலும் செல்ஃபி எடுக்க முயன்று விபரீதமான விளைவுகளை சந்திக்க வேண்டாம் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்






















