கீழடி ஆய்வுகள் தண்ட செலவா? - கேள்விகளை அடுக்கும் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன்!
தொல்லியல் ஆய்வுகளால் தமிழர்களின் வயிறு நிரம்புமா? என்ற துக்ளக் விமர்சித்த நிலையில், 3000 கோடியில் பட்டேலுக்கு சிலை வைக்கும்போது யாருடைய வயிறு நிரம்பியது? என எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் கேள்வி
கீழடி உள்ளிட்ட தொல்லியல் ஆய்வுகளுக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் இந்த தொல்லியல் ஆய்வுகளை விமர்த்து துக்ளக் வார இதழ் எழுதிய விமர்சன கட்டுரை சமூகவலைதளங்களில் விவாதத்தை எழுப்பியது. இந்த விவகாரம் குறித்து பேசிய தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாரத பண்பாடு என்றால் இனிக்கிறது, தமிழர் பண்பாடு என்றால் கசக்கிறதா? என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் இந்திய நடந்து வரும் தொல்லியல் ஆய்வுகள் குறித்து எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனிடம் பேசினோம்.
கொரோனாவிற்கு பிறகு நிதி இல்லாத சூழலில் தொல்லியல் துறைக்கு தண்டசெலவு செய்வதாக துக்ளக் இதழ் விமர்சித்துள்ளதே?
தொல்லியல் துறையை பொறுத்தவரை நாமெல்லாம் இன்னும் செலவு செய்யவே ஆரம்பிக்கவில்லை, உலக அளவில் தொல்லியலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இங்கு கொடுக்கப்படுவதில்லை. தொல்லியல் ஆய்வுகளில் தொடக்க நிலைகளில் மட்டுமே நாம் இருந்து வருகிறோம். கீழடி ஆய்வுக்கு ஒதுக்கப்படும் தொகை வெறும் 10 கோடி என்ற அளவில்தான் உள்ளது என்னை பொறுத்தவரை 1000 கோடிகள் செலவிட வேண்டிய முக்கியமான தருணமிது.
எங்கு தோண்டினாலும் வெறும் மண்பானைகளும் மண்டை ஓடுகளும் தான் கிடைக்கிறது; இதை வைத்து எப்படி தமிழர்களின் வரலாறை எப்படி கண்டுபிடிக்க முடியும் என்ற கேள்வியை துக்ளக் வார இதழ் எழுப்பி உள்ளதே?
கீழடியில் வெறும் மண்பானையும், மண்டை ஓடுகளும் மட்டும் கிடைக்கவில்லை, மண்பானையும் மண்டை ஓடும் கிடைக்கிறது என்பதை உலகின் மிக மூத்த நாகரீகத்தை கொச்சைப்படுத்தும் வார்த்தைகள் இது. உலகம் முழுவதுமே இதுபோன்ற ஈம எச்சங்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. எகிப்தில் மம்மிகளை தோண்டி எடுக்கிறார்கள். பூமியில் 8000 ஆண்டுகளுக்கு முன்பு பிணத்தை பதப்படுத்தும் தொழில்நுட்பம் தொடங்கி, அவர்கள் பயன்படுத்திய எல்லா பொருட்களும் அதில் உள்ளது.
மூன்று லட்சம் வருடங்களுக்கு முன்பாக பயன்படுத்திய கற் கோடாரிகள் கிடைத்துள்ளது. தமிழ் மொழிக்கு மட்டும்தான் தீர்க்கமான இலக்கியங்கள் இருக்கிறது. தமிழர் வாழ்வியலை சங்க இலக்கியம் தெளிவாக விவரிப்பதாக இருக்கிறது. ஒருகாலம் முழுவதும் இந்திய தொல்லியலாளர்கள் சங்க இலக்கியங்கள் எல்லாம் வெறும் புனைவு என்று கூறி சிறுமைப்படுத்தினர். தமிழரின் வரலாறு அவ்வுளவு பழமையானது அல்ல என்று கூறிவந்த நிலையில் கீழடி மூலம் நகர நாகரீகம் இருந்ததற்கான மறுக்க முடியாத சான்றுகள் கிடைத்துள்ளன
கீழடியில் வெறும் எலும்பும், பானையும் மட்டும் கிடைக்கவில்லை, மாறாக அங்கே வீடுகள், கட்டுமான பொருட்கள், சுட்ட குழாய்களை கொண்டு அமைக்கப்பட்ட கழிவுநீர் அமைப்பு ஆகிய நகர கட்டமைப்புக்கான ஏராளாமான சான்றுகள் கிடைத்துள்ளன. உறைகிணறுகள், தானியங்கள், தமிழ் எழுத்துகள் கொண்ட பாத்திரங்கள், பானைகள், வெள்ளிக்காசு ஆகிய ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் கீழடியில் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டிற்கும் ரோமாபுரிக்கும் இடையேயான வர்த்தக தொடர்பை விளக்கும் பொருட்கள், கண்ணாடி ஜாடிகள், அணிகலன்கள், முத்து, பவள மணிகள், கண்மை தீட்டும் குச்சி, யானை தந்தத்தினால் செய்யப்பட்ட தாயக்கட்டைகள், சீப்புகள், உழவுக்கருவிகள், நெசவுத் தொழில்சார்ந்த கருவிகள், தக்களிகள், சாயம் காய்ச்சியதற்கான சான்றுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளது.
இந்த பொருட்களை கண்ணாடி பேழையில் காட்சி படுத்துவதன் மூலமே தமிழரின் வயிறு நிரம்பிவிடுமா என்ற விமர்சனம் வைக்கப்படுகிறதே?
இந்த குற்றச்சாட்டை யார்? சொல்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். 3000 கோடியில் சர்தார் பட்டேலுக்கு சிலை வைக்கும்போது யாருடைய வயிறு நிரம்பியது. கொரோனா காலத்தில் 20 ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டப்படுவது வீண் செலவாக தெரியவில்லையா? எல்லோருக்கும் தடுப்பூசி தர முடியாது என நீதிமன்றத்தில் வாதிடும்போது நாடாளுமன்ற கட்டுமானத்தை நிறுத்திவிட்டு அந்த பணத்தில் தடுப்பூசியை தர வேண்டும் என தோன்றவில்லையா?
இந்தியாவில் இல்லாத சரஸ்வதி நதியை தேடி பல்லாயிரம் கோடியை மத்திய அரசு செலவு செய்து வருகிறது. 10 கோடி பேர் பேசுகின்ற தமிழ் மொழிக்கு ஆய்வுக்காக ஒதுக்கப்படும் தொகை எவ்வுளவு? அதே வேளையில் புழக்கத்திலேயே இல்லாத, ஒரு பால்பாக்கெட்டும், வெற்றிலைபாக்கும் கூட அந்த மொழியை கொண்டு வாங்க முடியாத சமஸ்கிருத மொழிக்கு ஆய்வுக்கு எவ்வுளவு செலவு செய்கிறீர்கள் என்ற கேள்வியை தமிழர்கள் நிச்சயம் கேட்பார்கள்.
வட இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட மாநிலங்கள் தங்கள் சொந்தமொழியை, சொந்த வட்டார வழக்கை இந்திக்கு காவு கொடுத்துவிட்டு நிற்கிறார்கள், ஆனால் மாறாக தமிழர்களின் தொல்லியல், இலக்கிய சான்றாதனங்கள் தமிழர்களின் முதுகெலும்பை நிமிர்த்தவே செய்கிறது.
வட இந்தியாவில் இந்த தொல்லியல் ஆய்வுகள் எந்த அளவில் உள்ளன, தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த ஆய்வுகள் நடைபெறுகின்றனவா?
தொல்லியல் ஆய்வுகள் எல்லாம் தமிழ்நாட்டில் மட்டும்தான் நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முனைகிறது துக்ளக்கின் கட்டுரை. குஜராத்தில் உள்ள தோலோவீரா, ஹரியானாவில் உள்ள ராக்கிகிரி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அஸ்தினாபுரம் ஆகிய இடங்களிலெல்லாம் மிக முக்கியமான தொல்லியல் ஆய்வுகள் எல்லாம் நடைபெற்று வருகிறது.
மதுரையை பொறுத்தவரை 1880களிலேயே மதுரையில் மண்ணை தோண்ட ஆரம்பித்துவிட்டனர். தமிழகத்தில் அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை, கொடுமணல், அழகன்குளம் உள்ளிட்ட இடங்களில் எல்லாம் தொல்லியல் ஆய்வு நடந்து வருகிறது.