உலக சுற்றுச்சூழல் தினம் 2022.. சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்வுகள்..
கடந்த 1974-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி சர்வதேச சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழும் மக்களின் கலாச்சாரம் மற்றும் தொழில்களுக்கேற்ப நிலமானது குறிஞ்சி, முல்லை, மருதம் , நெய்தல், பாலை ஆகியவைகளாக பிரிக்கப்பட்டு நீர் நிலைகள், மலைகள், உயிரினங்கள் என இயற்கை நமக்களித்த கொடைகளை நம் முன்னோர்கள் பாதுகாத்து அடுத்த தலைமுறைகளான நம்மிடம் விட்டு சென்றுள்ளார்கள். ஆனால் மாறி வரும் பருவநிலை மாற்றங்கள் சுற்றுச்சூழலில் இரு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதோடு உயிர்வாழ்வதற்கான தகுதியை இழந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தடுக்க நம் அனைவரின் மனதிலும் எண்ணங்கள் இருந்தாலும் அது தொடர்பான முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி சர்வதேச சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் இந்த தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி உலக சுற்றுச்சூழல் தினமான இன்று சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அந்த வகையில் மண் வளப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் மயிலாப்பூர் முதல் செங்கல்பட்டு வரை சுமார் 55 கி.மீ விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது.
மேலும் கோவை மற்றும் சேலத்தில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டமும், மதுரை, நாகர்கோவில், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் விழிப்புணர்வு வாக்கத்தான் (தொடர்நடை பயணம்) நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கும்பகோணம், மயிலாடு துறை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஸ்டாண்டத்தான் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
இதனைத் தவிர காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்ய உள்ளனர்.மண் வளத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கம் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 74 நாடுகள் இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்