டீவ் கட்டாததால் வண்டியை தூக்கிய ஊழியர்... ஊழியரையே ரைடு விட்டு தூக்கிய திண்டுக்கல் பெண்!
அடையாள சான்று இல்லாமல் எனது வாகனத்தை எப்படி நீங்கள் தூக்கலாம். 15,000 ரூபாய் பணத்துக்காக எனது வண்டியை நீங்கள் எடுத்து செல்வீர்களா. நாங்கள்தான் நேரம் கேட்டிருந்தோமே என சுதா கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் சிக்கரம்பட்டியை சேர்ந்தவர் சுதா. இவர் டிவிஎஸ் ஷோரூமில் இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கினார். முழு தொகையை ஒரே நேரத்தில் செலுத்த முடியாததால் முன் பணம் சிறிது கொடுத்து மீத தொகையை தவணை முறையில் கட்டிவந்தார். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வருடம் லாக்டவுன் போடப்பட்டதால் சுதாவால் தவணையை கட்டமுடியவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக தவணை தொகையும் ஏறிக்கொண்டே சென்றிருக்கிறது. 15,000 ரூபாய்வரை தவணை ஏறிவிட்டதால் சுதாவிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்ய முடிவு செய்து நிதிநிறுவனம் இரு ஊழியர்களை அனுப்பியதாக தெரிகிறது.
அதன்பேரில் சுதாவை வந்து சந்தித்த அவர்கள் இருவரும், கூடுதல் கடன் தருவதாக கூறியுள்ளனர். அதனை நம்பிய சுதா பைனான்ஸ் நிறுவனத்திற்கு இரண்டு பேருடன் சென்றார்.
அங்கு இருக்கும் ஊழியர் ஒருவரிடம் சுதாவை இவர்கள் பேச வைத்தனர். அப்போது இரண்டு பேரில் ஒருவர் சுதாவின் வாகனத்தை எடுத்துவிட்டு சென்றுவிட்டார். மற்றொருவர் தன்னுடைய வாகனத்தில் சென்றுவிட்டார்.
இதனை அறிந்த சுதா அதிர்ச்சியடைந்து தனது கணவர் மற்றும் சகோதரர் ஆகியோருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் இருவரையும் தேடி சென்றனர்.
அந்தச் சமயத்தில் சுதாவின் வாகனத்தை எடுத்து சென்றவரை துரத்தி பிடித்தனர். அதனையடுத்து மூன்று தவணை பாக்கி தொகை இருப்பதால் வாகனத்தை பறிமுதல் செய்ததாக கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுதா நிதிநிறுவன ஊழியர் என்றால் அதற்கான அடையாள சான்றை கேட்டார். ஆனால் சுதாவிடம் பிடிபட்ட இளைஞரிடம் சான்று இல்லை.
மேற்கொண்டு கோபமடைந்த சுதா அந்த இளைஞரை ஆபாச வார்த்தைகளால் கடுமையாக திட்டினார். மேலும் , அவரது செல்ஃபோனையும், வாகனத்தையும் பறிமுதல் செய்துகொண்டார்.
அதுமட்டுமின்றி அடையாள சான்று இல்லாமல் எனது வாகனத்தை எப்படி நீங்கள் தூக்கலாம். 15,000 ரூபாய் பணத்துக்காக எனது வண்டியை நீங்கள் எடுத்து செல்வீர்களா. நாங்கள்தான் நேரம் கேட்டிருந்தோமே என கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து இரண்டு தரப்பிலிருந்தும் இதுவரை காவல் துறையில் புகார் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நிதிநிறுவன ஊழியர் என்றால் அடையாள அட்டை வைத்திருக்கவேண்டும்தானே. இவர்களிடம் அது இல்லாததால் இருவரும் முதலில் நிதிநிறுவன ஊழியர்கள்தானா என்ற கேள்வியும் அந்தப் பகுதியில் எழுந்திருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்