Fox Jallikattu: வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா? வனத்துறையினர் கடும் எச்சரிக்கை.
வங்கா நரியை வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்து ஓடவிட்டு பிடிக்கும் ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக பொங்கல் பண்டிகையின்போது பல்வேறு வீர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு என்றாலே அனைவருக்கும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்குவதை பார்த்திருப்போம். ஆனால் சேலத்தில் ஒரு சில கிராமங்களில் வங்கா நரி ஜல்லிக்கட்டு என்பது விசேஷமான ஒன்று.
வங்கா நரி ஜல்லிக்கட்டு என்பது ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்துவிட்டு அடக்குவது போல வங்கா நரியை வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்து ஓடவிட்டு பிடிக்கும் ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், "சேலத்தில் வங்கா நரி ஜல்லிக்கட்டுதான் சிறப்பு". அப்படிச் கடந்த ஆண்டு நடந்துமுடிந்த பொங்கல் விழாவின் போது சேலத்தில் ஒரு சில கிராமங்களில் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடைபெற்றிருக்கிறதாம். 'நரி முகத்தில் முழிச்சா நல்ல யோகம் வரும்' என்பதை நம்பி இன்னும் சில கிராமங்களில் காணும் பொங்கல் பண்டிகையின் போது வங்கா நரியை வனத்திலிருந்து பிடித்து வந்து ஊர்வலமாக அழைத்துவருகின்றனர். அவ்வாறு அழைத்து வரும் நரியை ஊருக்கு மத்தியில் ஓட விட்டு அதை இளைஞர்கள் பிடிப்பது என்பது ஒரு போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கு இளைஞர்கள் வருடாவருடம் போட்டிக்கு முன்பே தங்களைத் தயார் படுத்திக்கொண்டு களத்துக்கு வருவதால், இதை ஜல்லிக்கட்டு என்றே அழைத்து வருகின்றனர். இது போன்று சிறிய விலங்கினங்களைக் கொடுமைப்படுத்தினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒவ்வோர் ஆண்டும் அரசுத் தரப்பில் நினைவுறுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஒரு சில பகுதிகளில் இந்த வங்கா நரி ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், நாளை சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கிராமங்களில் வங்கா நரியை பிடித்து வந்து ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் முயற்சி செய்து வருகின்றனர். வங்கா நரி காட்டு விலங்கு என்பதால் வங்கா நரி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். வனத்துறையினரின் அனுமதி இல்லாததால் தடையை மீறி வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தினால் வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு வனத்துறையினரின் தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இந்தத் தகவல் அறிந்து வாழப்பாடி வனத்துறை அதிகாரி துரைமுருகன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று வங்கா நரியை மீட்டிருக்கின்றனர்.
மேலும், இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், வனத்துறை எச்சரிக்கையை மீறி கடந்த ஆண்டு சின்னம்மநாயக்கன்பாளையத்தில் பொதுமக்கள் நரியைப் பிடித்துவந்திருக்கின்றனர். பின்னர் கொட்டாவாடியில் வழக்கு பதிவு செய்திருப்பதை அறிந்த கிராம மக்கள் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தாமல் நிறுத்தி வைத்திருக்கின்றனர். இதேபோன்று இந்த ஆண்டும் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தினால் அவர்கள் மீது வன உயிரினம் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர். இதனால் இந்த ஆண்டு வங்கா நதி ஜல்லிக்கட்டு சேலத்தில் நடத்தப்படுமோ என பரபரப்பு எழுந்துள்ளது