கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக் கொள்வதில் ஏன் தாமதம் என சென்னை உயர்நீதிமன்றம் அவரது பெற்றோருக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூரில் செயல்படும் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் தொடர்பாக தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது மாணவி ஸ்ரீமதி உடலை மறு கூராய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதி வழக்கறிஞருடன் மாணவியின் தந்தை மறு உடல் கூராய்வின் போது உடனிருக்கலாம் என்றும், இதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதேசமயம் மறுகூராய்வு முடிந்த பிறகு மாணவியின் உடலை எந்தவித எதிர்ப்புமின்றி பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இறுதிச் சடங்குகள் அமைதியாக நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டார்.
ஆனால் தனி நீதிபதி சதீஷ்குமாரின் உத்தரவை எதிர்த்து மாணவியின் பெற்றோர் மறுகூராய்வு செய்யும் மருத்துவர் குழுவில் தங்கள் தரப்பு மருத்துவரையும் சேர்க்க வேண்டுமென கூறி மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, மோகன் அமர்வு, கிரிமினல் விவகாரங்களில் தலையிட தங்களுக்கு அனுமதியில்லை என்றும், தனி நீதிபதியின் உத்தரவில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் உடல் மறு உடற்கூராய்வுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அத்துடன் உயர்நீதிமன்ற உத்தரவின் படி மாணவியின் உடல் பிரேத பரிசோதனை திட்டமிட்டபடி அரசு மருத்துவமனையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் மறு உடற்கூராய்வு நிறைவடைந்தது. முதலில் உடலை வாங்க மறுத்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் ஒருவழியாக உடலை வாங்க சம்மதம் தெரிவித்ததாக முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில் மாணவி உடலை பெற்றுக் கொள்ளவில்லை என முறையிடப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது 2வது முறையாக மாணவி உடலை உடற்கூராய்வு செய்ததில் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், இருமுறையும் வீடியோ பதிவு முழுமையாக செய்யப்பட்டதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதி ஏன் மாணவியின் உடலை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது?, ஏன் ஒவ்வொரு முறையும் பிரச்சனையை ஏற்படுத்துகிறீர்கள் என ஸ்ரீமதியின் பெற்றோரிடம் கேள்வியெழுப்பினார்.
மாணவியின் உடற்கூராய்வு அறிக்கைக்கு ஸ்ரீமதியின் பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், அந்த அறிக்கையை ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ குழு ஆய்வு செய்ய உத்தவிட்ட நீதிபதி சதீஷ்குமார் உடற்கூராய்வு வீடியோக்களை ஒப்படைக்க வேண்டும் என கூறினார். மேலும் மாணவியின் மரணத்தில் சிலர் ஆதாயம் தேட நினைப்பதாகவும், இது பெற்றோருக்கு தெரியாமல் நடந்துள்ளது. மகளின் உடலை நாளைக்கு பெற்றுக்கொள்ளா விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து நாளை காலை 11 மாணவியின் உடலை பெற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். ஸ்ரீமதியின் உடலுக்கு கண்ணியமான முறையில் இறுதி சடங்குகள் நடத்துங்கள், அவரின் ஆன்மா இளைப்பாறட்டும். இதற்காக பெற்றோரிடம் பேசும்படியும் அவர்களது வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.