தமிழ்மொழிக்கான கல்வெட்டை திராவிட மொழி என்று அடையாளப்படுத்துவது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால தொன்மையான கல்வெட்டுகள், தமிழ் படிமங்கள், போன்றவை மைசூர் கல்வெட்டு தலைமையகத்தில் ஏன் வைக்கப்பட்டுள்ளன? - நீதிபதிகள் கேள்வி.
நாடு முழுவதும் உள்ள 80,000 கல்வெட்டுகளில், 60,000 கல்வெட்டுகள் தமிழுக்கானவை என்றால் அதை திராவிட மொழி கல்வெட்டுகள் என அடையாளப்படுத்துவது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடத்தக்கோரியும், மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களை பாதுகாக்கக் கோரியும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்ட பலர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுமீதான விசாரணை நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.
கர்நாடக அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே காவிரி பிரச்னை இருக்கும் நிலையில், தமிழகத்தில் கண்டுபுடிக்கப்பட்ட பழங்கால தொன்மையான கல்வெட்டுகள், தமிழ் படிமங்கள், போன்றவை மைசூர் கல்வெட்டு தலைமையகத்தில் ஏன் வைக்கப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மைசூரிலுள்ள கல்வெட்டியல் துறையை தமிழகத்திற்கு மாற்றமுடியாதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விக்கு மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கையில்,"1980-ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான கிளை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 பேரும், மைசூரில் 2 பேரும் என தமிழுக்கு நான்கு கல்வெட்டு ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் சமஸ்கிருதத்துக்கு ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனரா? என்ற நீதிபதிகள் பதில் கேள்வியை எழுப்பினர். சமஸ்கிருதத்துக்கு ஒரு ஆய்வாளர் பணிசெய்து வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், "நாடு முழுவதும் உள்ள 1,00,000 கல்வெட்டுகளில், 60,000 கல்வெட்டுகள் தமிழ் மொழிக்கானவை என்றிருக்கையில்,சென்னையில் சமஸ்கிருதத்துக்கு ஆய்வாளர்களின் தேவையென்ன? என கேள்வி எழுப்பினர். மேலும், பெரும்பாலான கல்வெட்டுகள் தமிழ் மொழிக்கானவை எனும்போது அதனை திராவிட மொழி என அடையாளப்படுத்த வேண்டிய அவசியமென்ன என்றும் கேள்வி எழுப்பினர்.
"இது அரசின் கொள்கை முடிவு" என மத்திய அரசின் சார்பில் இதற்கு பதிலளிக்கப்பட்டது. ஒரு இனத்தின் தொன்மையான சமூக, பண்பாட்டு வரலாற்றை ஆய்வதற்கு கல்வெட்டுச் சான்றுகளே முக்கிய இடம் வகிக்கிறது. அரசின் கொள்கை முடிவு என்றாலும், ஒன்றன் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருத்தல் கூடாது. நமது அனைத்து மொழிகளும் வளமான வரலாறை கொண்டுள்ளது. அனைத்து மொழிகளின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை நாம் காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு இதற்கு போதிய முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
மேலும், இந்திய தொல்லியல் துறையில் தற்போது உருவாக்கப்பட்ட 758 பணியிடங்களில் எந்தெந்த மொழிக்கு எத்தனை இடங்கள் என மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும், தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவு அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.