Asra Garg IPS: சாதியவாதிகளுக்கு சிம்ம சொப்பனம்!ரவுடி ராஜ்ஜியத்தின் பகைவன்! யார் இந்த அஸ்ரா கார்க்?
மதுரை மண்டலத்தின் புதிய ஐஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
சாதியவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த தமிழக ஐபிஎஸ் கேடர் போலீஸ் அதிகாரி அஸ்ரா கார்க்கை, தற்போது மதுரை மண்டல ஐஜியாக நியமித்திருக்கிறது தமிழக அரசு. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அஸ்ராக் கார்க், பொறியியல் படித்தாலும் காவல்துறை மீது இருந்த ஈர்ப்பால் ஐபிஎஸ் அதிகாரி ஆனவர். கடந்த 2008ஆம் ஆண்டு திருநெல்வேலி எஸ்.பியாக நியமிக்கப்பட்ட கார்க், அங்கு நடைபெற்ற கந்துவட்டி கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, சாமானிய மக்களை துன்புறுத்தும் கந்துவட்டிக் காரர்களை கைது செய்து சிறையில் அடைத்து அவர்கள் கொட்டத்தை அடக்கினார்.
நெருப்பு பட்டால் பற்றி எரியும் கந்த கிடங்கு போல, எதை தொட்டாலும் சாதிய பிரச்னையாக மாறிவிடும் பதற்றமிக்க திருநெல்வேலியில், கார்க் எடுத்த நடவடிக்கைகளால் சாதிய கலவரவங்கள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டன. 2010ல் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட கார்க், 2011ல் நடைபெற்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு கட்சிகள் செய்யும் பண விநியோகத்தை வெகுவாக கட்டுப்படுத்தி, தேர்தலை சிறப்பாக நடத்தியதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராட்டப் பெற்றவர்.
மதுரை உத்தமபுரத்தில் தீண்டாமை சுவர், ஊர் தாண்டக் கூடாது என்ற கட்டுப்பாடு என தலித் மற்றும் தலித் அல்லாதவர்கள் இடையே கனலாக தகித்துக்கொண்டிருந்த சாதிய வன்மத்தை தன் சாதுர்யத்தால் கட்டுப்படுத்திய காட்டியவர். அதுமட்டுமில்லாமல், அதே உத்தமபுரத்தில் தலித் மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபட உறுதுணையாக நின்று காட்டி அனைவரும் சமத்துவம் என்பதை நிறுவிக் காட்டினார். இதனால், மக்களுக்கு கார்க் மீது நம்பிக்கை கூடியது. எந்த பிரச்னையாக இருந்தாலும் எஸ்.பி கார்க்கிடம் நேரடியாக சொன்னால் தீர்வு பிறக்கும் என்ற தைரியம் அவர்களுக்கு வந்தது.
2012ல் மதுரை எஸ்.பி.யாக இருந்து அவர் செய்த சம்பவம், பெண்களுக்கு புது தெம்பை கொடுத்தது. தனது மகளையே பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தந்தையை அடித்து கொன்ற தாயை இந்திய தண்டனை சட்டம் 100 மற்றும் 120வதை பயன்படுத்தி விடுவித்தார் கார்க். இது தமிழக காவல்துறை வரலாற்றில் புதிய அத்யாயம். பலரும் அறியாத சட்டப்பிரிவை பொதுவெளிக்கு காட்டி புது வெளிச்சம் காட்டினார் கார்க். இந்த செய்தி வெளியில் வந்தது மதுரை மக்கள் அவரை தங்கள் வீட்டு பிள்ளை என கருதி கொண்டாடத் தொடங்கினர்.
தமிழகத்தையே உலுக்கிய சாதிய அடக்குமுறையான ‘இரட்டை குவளை’ முறையை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து சமூக நீதி அமைப்புகளால் பாராட்ட பெற்றார் கார்க். குறிப்பாக, மதுரை, நெல்லை, தருமபுரி மாவட்ட டீ கடைகளில் இரட்டை குவளை முறை அமலில் இருந்தால் அந்த கடையின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து பயத்தை காட்டி சாதிய ஏற்றத் தாழ்வை ஒழிக்க முயன்றார் கார்க். 2013ல் தேனி மாவட்டம் தேவாதானப்பட்டியில் இளம்பெண்ணை HIV பாதித்த நபருக்கு திருமண செய்ய வைக்க நடந்த முயற்சியை தடுத்து அனைவராலும் அனைவராலும் பாராட்டப்பெற்றார், நில அபகரிப்பு வழக்கில் முதல் கைது செய்தவரும் இதே அஸ்ரா கார்க்தான்.
தருமபுரி உள்ளிட்ட பின் தங்கிய மாவட்டங்களில் நடைபெற்று வந்த கிட்னி திருட்டை ஒழித்து, அப்பாவி மக்களை பணத்தை காட்டி கிட்னியை பறித்து வந்த கும்பலையும் கைது செய்து கவன் ஈர்த்தார் கார்க். 2016ல் தமிழக காவல் பணியில் இருந்து CBI க்கு சென்ற கார்க், அங்கும் துடிப்பாக செயல்பட்டு பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு கண்டு பாரட்டப்பெற்றுள்ளார். குர்கான் தனியார் பள்ளி மாணவர் மர்மமான இறந்துகிடந்த வழக்கில், துப்பு துலக்கி குற்றவாளியை கண்டுபிடித்தார்.2019ல் தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற ஹைதாராபத்தை சேர்ந்த நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து உள்துறையில் பணியாற்றி தரகராக செயல்பட்டவரையும் கைது செய்தார் அதிரடி காட்டினார்.
இப்பேர்பட்ட நேர்மையான, துடிப்பான, மக்களுக்கான போலீஸ் அதிகாரியாக இருக்கும் அஸ்ரா கார்க்கைதான் மதுரை மண்டலத்திற்கு புதிய ஐ.ஜியாக நியமித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.இனி மதுரை மண்டலத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள், ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து என அத்தனைக்கும் தீர்வு வரும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்