ஷாப்பிங் மால்களால்தான் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு, பள்ளிகளால் இல்லை - விஞ்ஞானி செளம்யா சுவாமிநாதன்
கொரோனா வைரஸ் தொற்று நோயை காட்டிலும், பள்ளிக் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடே மிகப்பெரிய தொற்றாக இருக்கிறது.
பள்ளிகளை விட மால்கள் உள்ளிட்ட பொதுஇடங்களுக்கு செல்வதால்தான் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி செளம்யா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில், ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி செளம்யா சுவாமிநாதன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களுக்கு செளம்யா சுவாமிநாதன் அளித்த பேட்டியில், “முகக்கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இது தொடர்ந்தால், கொரோனா மூன்றாவது அலை வராமல் இருக்க நம்மால் தடுக்க முடியும். அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தும் வரை கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். வைரஸ்களின் நடுவே பாதுகாப்புடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதாலும், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளதாலும், கொரோனா குறித்து பயப்படத் தேவையில்லை. குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாகத்தான் உள்ளது. பெரும்பாலான குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இணை நோய்கள் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை கொடுக்கலாம். பள்ளிகளை விட மால்கள் உள்ளிட்ட பொதுஇடங்களுக்கு செல்வதால்தான் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது” என்று கூறினார்.
இதன்பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ”அனைத்து தரப்பு கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும். ஊரடங்கு குறித்த அறிவிப்பை வெளியிடும்போது பள்ளிகள் திறப்பு குறித்தான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார். மாணவர்கள் விரும்பினால் மட்டும் பள்ளிக்கு வரலாம்” என்றார்.
மேலும், “கொரோனா வைரஸ் தொற்று நோயை காட்டிலும் கற்றல் குறைபாடே மிகப்பெரிய தொற்றாக இருக்கிறது. கல்வி வல்லுநர்களின் இந்த கருத்தை களைய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளி திறப்பு தொடர்பாக விமர்சனங்கள் எழாமல் நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால் விமர்சனங்கள் எழுந்தாலும் பரவாயில்லை. குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதே முக்கியம்” என்றும் அமைச்சர் கூறினார்.
தமிழ்நாட்டில் 1694 பேருக்கு கொரோனா தொற்று- 14 பேர் உயிரிழப்பு!#Tncoronaupdate #Coronavirushttps://t.co/0RtqjXm59H
— ABP Nadu (@abpnadu) September 26, 2021
கோவையில் இன்று 196 பேருக்கு கொரோனா தொற்று ; ஒருவர் உயிரிழப்பு..!https://t.co/mJQMFM2HA8
— ABP Nadu (@abpnadu) September 26, 2021