NLC நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது; டாஸ்மாக் மூடுவோம்! - சௌமியா அன்புமணி ஆவேசப் பேச்சு!
நாளுக்கு நாள் பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி வரும் நிலையில் டாஸ்மார்க் மூடுவதை பற்றி திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது என்ன ஆனது எனவும் கேள்வி?

கடலூர் : தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுக்காக கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் விளைவித்த கரும்பை கொள்முதல் செய்யாமல் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்ததாக தமிழக அரசு மீது சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு.
கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் நடைபெற்றது. சிங்க பெண்ணே எழுந்து வா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சௌமியா அன்புமணி.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தால் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த சௌமியா அன்புமணி ஆசியாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு நெய்வேலி பகுதியில் தான் ஆர் டி சியன் ஊற்று இருந்தது எனவும் ஆனால் தற்பொழுது நிலத்தடி நீர்மட்டம் 800 அடிகள் சென்றுவிட்டது என தெரிவித்தார் மேலும் நிலம் கொடுத்த மக்களுக்கு தற்பொழுது வரை தற்காலிக பணி மட்டுமே வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் CSR நிதி ராஜஸ்தான் பீகார் போன்ற வட மாநிலங்களில் கோவில் கட்ட பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்த அவர் . நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் சுரங்க நீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதால் விவசாய நிலங்களில் கரி படிந்து விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதாக குறிப்பிட்டார் மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள குடி தண்ணீரில் பாதரசத்தின் அளவு அதிகரித்து உள்ளதாக தெரிவித்த அவர் என்எல்சி நிறுவனத்தால் மக்கள் வாழவே தகுதியற்ற நிலமாக கடலூர் மாவட்டம் மாறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
பலாப்பழத்திற்கு கேரளா மாநிலத்தில் கொடுக்கும் முக்கியத்துவம் தமிழகத்தில் கொடுக்கப்படவில்லை எனவும் பண்ருட்டி என்றாலே பலாப்பழம் தான் நினைவிற்கு வரும் எனவும் ஆனால் பலாப்பழக்கத்திற்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். பலாப்பழத்தை மூலப்பொருளாக கொண்டு பல்வேறு தொழிற்சாலைகளை அமைத்து இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
திமுக அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு டாஸ்மார்க் கடைகளை மூடவில்லை எனவும் அதற்கு பதிலாக பல்வேறு இடங்களில் டாஸ்மார்க் கடைகளை திறந்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு குடிப்பழக்கத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி பொறுப்பற்றவுடன் முதல் கையெழுத்து மதுபான கடைகளை மூடுவது தான் எனவும் பள்ளி கல்லூரி மாணவர்கள் நாளுக்கு நாள் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாகவும் பெற்றோர்கள் அவர்களை கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். போதை இல்லாத மாநிலமாக தமிழாகத்தை உருவாக்க வேண்டும் என்றால் அனைத்து மகளிரும் அன்புமணி பின்னால் உறுதுணையாக நிற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கடலூர் மாவட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்ட மேலும் உள்ளாட்சித் தேர்தல்களில் அதிக அளவில் பெண்கள் பங்கேற்று போட்டியிட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
நெய்வேலியில் நடைபெற்ற தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணத்தில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முத்துக்கிருஷ்ணன் செல்வ மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.





















