Kolkata Murder Case: நீதி வேண்டும்! கொல்கத்தா மாணவிக்காக போராட்டத்தில் குதித்த திருவாரூர் மருத்துவர்கள்!
மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தை கண்டித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயிற்சி மருத்துவர் படுகொலை:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
திருவாரூரில் போராட்டம்:
அதனை ஏற்று தமிழகத்திலும் இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் சுமார் 300 பேர் கருப்பு பேட்ச் அணிந்து பேரணியாக வந்து மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பயிற்சி மருத்துவர்களுக்கு 36 மணி நேர பணி நேரத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர். திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை 300-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6. 00 மணி வரை புற நோயாளிகள் பிரிவு இயங்காது என தனியார் மருத்துவமனைகள் சங்கத்தினர் அறிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.