2023-24 ஆண்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் தெரியுமா? ரூ.2 கோடியை தாண்டிய தீருதவித் தொகை...
2023-24 ஆம் ஆண்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 120 வழக்குகளில் பாதிக்கப்பட்ட 274 பேருக்கு தீருதவித் தொகையாக ரூ.2 கோடியே 51 லட்சத்து 81 ஆயிரத்து 668 வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 2023-23 ஆம் ஆண்டில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 274 பேருக்கு ரூ.2.51 கோடி தீருதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி. பழனி தெரிவித்தார். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சார்பில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் விதிகள் குறித்த விழுப்புரம் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் சி.பழனி பேசுகையில்: விழுப்புரம் மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 120 வழக்குகளில் பாதிக்கப்பட்ட 274 பேருக்கு தீருதவித் தொகையாக ரூ.2 கோடியே 51 லட்சத்து 81 ஆயிரத்து 668 வழங்கப்பட்டுள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு எவ்வித நிலுவையின்றி மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதன்படி, 274 பேரின் வாரிசுதாரா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக தலா ரூ.5 ஆயிரம் மற்றும் பஞ்சப்படி சோ்த்து மொத்தம் ரூ.21,80,618 வழங்கப்பட்டுள்ளது.
நிகழாண்டில், (2024-2025) வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தீருதவித் தொகை வழங்க விழுப்புரம் மாவட்டத்துக்கு ரூ.2.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வழக்குகளில் பாதிக்கப்பட்டு இறந்த குடும்பங்களைச் சோ்ந்த 10 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 வழக்குகளில் பாதிக்கப்பட்டு இறந்த நபா்களின் வாரிசு தாரா்களுக்கு அரசுப்பணி வழங்கிட துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவின் சார்பில் ஒன்றிணைவோம் சமூக விழிப்புணா்வு தொடா் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஸ்ருதன் ஜெய் நாராயணன், திண்டிவனம் சார் ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா்காஜா சாகுல் ஹமிது, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வளா்மதி, விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினா்கள் குமரவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.