(Source: ECI/ABP News/ABP Majha)
‘உன்னை விட சாமி இல்ல’ ...மனதை வருடும் மாணவி தர்ஷினியின் பாடல் - வாழ்த்தோடு வாய்ப்பு கொடுக்கும் இமான்
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய குரல் வளத்தாலும், விடா முயற்சியாலும் இன்று உலகம் அறியும் ஒருவராக மாறி இருக்கிறார் மாணவி தர்ஷினி.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சார்ந்த அரசு பள்ளி மாணவி பாடல் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள அம்மணம்பாக்கம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி அங்காளம்மாள் ராஜ்குமார் பம்பை உடுக்கை வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு லத்திகா மற்றும் தர்ஷினி என இரு மகள்கள் உள்ளனர். இருவரும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்து மற்றும் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றனர். இரண்டாவது மகளான தர்ஷினி தந்தை ராஜ்குமார் பாடல் பாடிக்கொண்டே பம்பை, உடுக்கை வாசிப்பதை கவனித்து அவரைப் போலவே நாட்டுப்புற பாடல் பாடி வந்துள்ளார். இதை அறிந்த மாணவியின் ஆசிரியர் ஒருவர் மாணவியை கடந்த ஓராண்டுக்கு முன்பு திண்டிவனத்தில் இசை பள்ளியில் சேர்த்து விட்டுள்ளார்.
இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பாட்டு போட்டியில் கலந்து கொண்ட மாணவி தர்ஷினி வட்டார ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தொடர்ந்து கடந்த வாரம் வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட மாணவி தர்ஷினி முதல் இடத்தை வென்றுள்ளார். மாணவி தர்ஷினி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, பாட்டு போட்டி என மூன்று பிரிவுகளில் கலந்து கொண்ட நிலையில் பாட்டு போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தின் கடைகோடி கிராமத்தில் வசிக்கும் ஒரு அரசு பள்ளி மாணவி பாடல் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பது, பெற்றோருக்கும் அந்த கிராமத்திற்கு மற்றும் ஒட்டுமொத்த அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கி இருக்கிறார் தர்ஷினி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய குரல் வளத்தால் விடா முயற்சியால் இன்று உலகம் அறியும் ஒருவராக மாறி இருக்கிறார் மாணவி தர்ஷினி. மாணவியின் குரலில் ஒலிக்கும் தந்தை குறித்த பாடலும் தாய் குறித்த பாடலும் கேட்பவரின் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவியை அங்கே 100 நாள் வேலை செய்யும் பெண்கள் சிலர் அழைத்து பாட சொல்லி உள்ளனர். அப்போது அப்பா குறித்த பாடல் ஒன்றை மாணவி பாடியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு பிரபலம் அடைந்த நிலையில் இசையமைப்பாளர் டி. இமான் மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதோடு பாடுவதற்கு வாய்ப்பு வழங்குவதாகவும் கூறியுள்ளார்.