மணல் கொள்ளையை விஞ்சும் கூழாங்கற்கள் கொள்ளை - ஆரோவில் அருகே பறிபோகும் தமிழகத்தின் கனிமவளம்...!
பொக்லைன் மூலம் 25 அடி ஆழத்திற்கும் மேலாக தோண்டி எடுக்கப்படும் கூழாங்கற்கள், ஒரு டன் 18ஆயிரம் வரை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே செம்மண் நிலப்பரப்பில் பல அடி ஆழம் தோண்டி கூழாங்கற்கள் எடுத்து கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டதில் சர்வதேச நகரமாக ஆரோவில் அமைந்துள்ளது. இப்பகுதி முழுதும் பல ஏக்கர் பரப்பளவில் செம்மண் நிலப்பகுதியாக உள்ளது. இங்கு மானாவாரி பயிராக முந்திரி அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த நிலப்பரப்பில் கூழாங்கற்கள் அதிகளவில் புதைந்துள்ளன. இதனால் விவசாயம் செய்யமுடியாது என நினைத்த விவசாயிகள், நிலங்களை குத்தகை மற்றும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
நிலத்தை வாங்கியவர்கள் மண்ணில் கூழாங்கற்கள் வளம் உள்ளதை கண்டுபிடித்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு அனுமதியின்றி கூழாங்கற்களை, தோண்டி எடுத்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக வானுார் அடுத்த ராயபுதுப்பாக்கம் பனைமரத்தோப்பில் இருந்து மாத்துாருக்குகுறுக்குப் பாதையில் செல்லும் காட்டுமேடு பகுதியில் பொக்லைன் மூலம் பல இடங்களில் 25 அடி ஆழத்திற்கு மேல் தோண்டி எடுக்கின்றனர். இதற்காக நிலத்தில் இடையூறாக இருக்கும் முந்திரி மரம், பனை மரம், தைலமரம் ஆகியவற்றையும் வெட்டி அகற்றுகின்றனர். தோண்டி எடுக்கப்படும் கூழாங்கற்களை சல்லடை மூலம் சலித்து மண், சிறிய கற்கள், பெரிய கற்கள் என ரகம் பிரிக்கின்றனர். சிறிய கற்களுக்கு சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை பகுதியில் அதிகம் கிராக்கி இருப்பதால் இதற்கு அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். சிறிய மற்றும் பெரிய கற்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு டன் 18 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பகிரங்கமாக இயற்கை வளம் கொள்ளை போவதை வருவாய் துறை அதிகாரிகளும், போலீசாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
இந்த கூழாங்கற்களை ஆழ்துளை கிணறு, பூங்கா, மழை நீர் சேகரிப்பு, தொழிற்சாலை மற்றும் பங்களா வீடுகளின் அழகிற்காகவும் பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து பள்ளம் தோண்டி கூழாங்கற்கள் எடுப்பதால், விரைவில் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கனிமவளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வானுார் பகுதியில் இயற்கை வளத்தை பாதுகாக்க முடியும். அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு கூழாங்கற்கள் கொள்ளை போவது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் நன்கு தெரியும். ஆனால், கூழாங்கற்கள் குவாரி உரிமையாளர்கள் மாதம் தோறும் அதிகாரிகளை முறையாக கவனித்துவிடுவதால் கண்டு கொள்வதில்லை.
சில முக்கிய புள்ளிகள், இந்த கூழாங்கற்கள் குவாரியை நடத்துகின்றனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் இந்த குவாரிகளில் 200க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பகல் நேரங்களில் கனிம வளத்துறை அதிகாரிகள் வருவதை கண்காணிக்க தனியாக ஒரு குழுவே செயல்படுகிறது. பகல் நேரங்களில் கூழாங்கற்கள் தோண்டும் பணியும், இரவு நேரங்களில் பாதுகாப்பாக கடத்தும் பணியும் கனக்கச்சிதமாக நடந்து வருகிறது.